தாமரை இலையில் தண்ணியே ஒட்டாது… தமிழ்நாடு ஒட்டுமா? பாஜவுடன் கூட்டணி சேர்ந்துள்ள உலக மகா ஊழல் கட்சி அதிமுக: தவெக 2வது மாநில மாநாட்டில் விஜய் கடும் தாக்கு!

திருமங்கலம்: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை அருகே பாரைபத்தியில் நேற்று நடந்தது. இதற்காக மதுரை – தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிற்பகல் 3.45 மணியளவில் தவெக தலைவர் விஜய் மேடைக்கு வந்தார். தொடர்ந்து ரேம்ப் வாக் நடைமேடையில் கட்சியினரை பார்த்து கையசைத்தவாறு நடந்து சென்றார். பின்னர் மேடையில் கொள்கைத் தலைவர்களுக்கு மலர்தூவி மரியாதை செய்தார்.

தொடர்ந்து மேடையின் முன்னால் அமைக்கப்பட்டிருந்த 40 அடி உயர கம்பத்தில் கட்சிக்கொடியை விஜய் ஏற்றினார். பின்னர் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பொதுச்செயலாளர் ஆனந்த் துவக்கவுரையாற்றினார்.  இதைத்தொடர்ந்து, விஜய் பேசியதாவது: சிங்கத்தோட சத்தம் 8 கிமீ தூரத்திற்கு அதிரும். சிங்கம் வேட்டைக்கு மட்டும் தான் வெளியே வரும். வேடிக்கைக்கு வராது. உயிருள்ள மிருகத்தையே வேட்டையாடும். எவ்வளவு பசி இருந்தாலும், உயிர் இல்லாத கெட்டுப் போனதை தொடாது. ஆனால், தொட்டால் விடாது. காட்டில் தனது எல்லையை தானே வகுக்கும்.

அதுக்கு கூட்டமா இருக்கவும் தெரியும். தனியாக இருக்கவும் தெரியும். அப்படியே இருந்தாலும், அஞ்சாமல் கெத்தா வந்து தண்ணி காட்டும். எப்பவும் அதன் தனித்தன்மையை இழக்காது. இந்த மண்ணுக்கு வந்ததும் ஒரே ஒருத்தர் தான் நினைவுக்கு வந்தார். அவர் எம்ஜிஆர். அவருடன் பழக வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரைப் போன்ற எண்ணம் கொண்ட விஜயகாந்துடன் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவரை எப்போதும் மறக்க முடியாது. நம் அரசியல் உண்மையானது. உணர்வுபூர்வமானது. அடுத்தாண்டு 2026ல் வரலாறு திரும்பப் போகுது என்று உறுதியாக சொல்ற மாநாடு. நமக்கு எதிரான கூக்குரலை சிரிப்புடன் நாம் கடந்து வந்துள்ளோம்.

பாசிச பாஜவுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட்டணி வைக்க நாம என்ன உலக மகா ஊழல் கட்சியா? வெகுஜன மக்கள் படை நாம். அதனால அடிமை கூட்டணி நமக்கு எதுக்கு? நம்ம கூட்டணி சுய மரியாதை கூட்டணியாக இருக்கும். நம்மை நம்பி வருவோருக்கு ஆட்சி, அதிகாரம் நிச்சயம் உண்டு. 2026ல் இரண்டு பேருக்கு நடுவுல தான் போட்டி. திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டியே.ஒன்றிய பாஜ அரசு 3ம் முறையாக ஆட்சிக்கு வந்தது இந்த நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவா? இல்லை இஸ்லாமியர்களுக்கு கெடுதல் செய்யவா?

தமிழ்நாட்டு மீனவர்கள் 800 பேர் இலங்கை கடற்படையினரால் அழிக்கப்பட்டுள்ளனர். கச்சத்தீவை மீட்டு கொடுங்கள். அது போதும். உங்களின் முரட்டு பிடிவாதத்தால் தான் நீட் தேர்வு நடக்கிறது என சொல்லவே மனசு வலிக்கிறது. தமிழ்நாட்டிற்கு தேவையான எதையும் செய்ய மாட்டீர்கள். மைனாரிட்டி ஆட்சி நடத்த உங்களுக்கு ஒரு கூட்டணி. ஊழல் கட்சிகளை மிரட்டி 2029 வரை ஒரு பயணம் போயிடலாம் என நினைக்கிறீர்கள். தாமரை இலையில் தண்ணியே ஒட்டாது. தமிழ்நாட்டு மக்கள் எப்படி ஒட்டுவார்கள்? எப்படி ஓட்டு போடுவார்கள்? கீழடி ஆதாரத்தை மறைத்து எங்களது நாகரீகத்தையும், ஆதாரத்தையும் மறைத்து ஏமாற்ற நினைக்காதீர்கள். மத நல்லிணக்கம் உள்ள மண் இது.

உங்களது எண்ணம் ஒரு நாளும் ஈடேறாது. தமிழக அரசியலில் எம்ஜிஆர்

 

ஒரு மாஸ். அப்படிப்பட்ட எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியை இன்று யார் கட்டிக் காப்பது? அந்த கட்சி இப்போது எப்படி உள்ளது. அதிமுகவில் அப்பாவி தொண்டர்கள் தவிக்கிறார்கள். என்ன வேஷம் போட்டு பாஜக இங்க வந்தாலும் அவங்க வேலை ஆகாது. விரைவில் மக்களை போய் சந்திப்பேன். 234 தொகுதிகளிலும் விஜய் தான் வேட்பாளர் என நினைத்து ஓட்டு போடணும். இவ்வாறு அவர் பேசினார்.

* தீர்மானமின்றி மாநாடு நிறைவு

எந்தவொரு அரசியல் கட்சியின் மாநாடாக இருந்தாலும் அந்த மாநாட்டில் மக்கள் நலன், அரசியல் உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். ஆனால், நேற்று நடந்த தவெக மாநாட்டில் எந்த தீர்மானமும் நிறைவேற்றாமல் மாநாடு முடிந்தது.

* 6 தீர்மானம் நிறைவேற்றியதாக பிரஸ் ரிலீஸ்

மதுரையில் நேற்று நடந்த தவெக 2வது மாநில மாநாட்டில், வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிரத் திருத்தம் என்ற பெயரில் லட்சக்கணக்கானோரின் பெயர்கள் நீக்கப்பட்டு வருவது ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல. இந்த சிறப்புத் தீவிர திருத்தத்தை தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் மேற்கொள்ளக் கூடாது, ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக பிரஸ் ரிலீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

* ஆம்புலன்ஸ்களில் தொண்டர்கள்

மாநாடு நடக்கும் பகுதி மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மாநாட்டிற்கு வந்தவர்கள் தங்களின் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தியதால் இந்த தடத்தில் போக்குவரத்து பாதித்தது. இதேபோல், மதுரை – திருமங்கலம் தடத்தில் வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டதால், மதுரை – திருமங்கலம் தடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாநாட்டு திடலுக்குள் முன்வரிசைக்கு செல்வதற்காக சில தவெக தொண்டர்கள் மாநாட்டு மைதானத்திற்குள் சென்ற ஆம்புலன்ஸ்களில் ஏறி உட்கார்ந்து சென்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

* டாஸ்மாக் கடையில் தள்ளுமுள்ளு

மாநாடு நடைபெறும் பாரபத்தி அருகே ஆவியூரில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்க கூட்டம் அதிகமாக இருந்தது. முண்டியடித்து வாங்குவதில் அவர்களுக்கு இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த கடையை சுற்றிலும் மது வாங்குவதற்கான கூட்டம் இருந்து கொண்டே இருந்தது. இதனால், ஒரு மணி நேரத்திற்குள் கடையில் இருந்து சரக்குகள் முழுமையாக விற்றுத்தீர்ந்தன.

* ‘டீ விக்க’ விமர்சனம் சீமானுக்கு பதிலடி

மாநாட்டு பாதுகாப்பு பணியில் கடந்த 3 நாட்களாக ஆண் பவுன்சர்கள் அதிகளவில் ஈடுபட்டிருந்தனர். நேற்று அதிகாலை முதல் நூறுக்கும் மேற்பட்ட பெண் பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சமீபத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய் கட்சியின் ரசிகர்களை கிண்டலடிக்கும்விதமாக, ‘டிவிகே.. டிவிகே’ என ரசிகர்கள் கூச்சலிடுவதை, ‘டீ விக்க.. டீ விக்க…’ என கிண்டலடித்தார். இதற்கு பதிலடியாக, மாநாட்டில் கூடிய தொண்டர்கள் திடீரென ‘சீமான் ஒழிக’ என கோஷமிட்டனர்.

* பார் ஆனது ‘பார்’…க்கிங்

மாநாட்டிற்கு வந்த வாகனங்களை நிறுத்த தனித்தனி பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருந்தது. ஆனால், பெரும்பாலான தொண்டர்கள் கார் பார்க்கிங் பகுதியை திறந்தவெளி பாராக மாற்றினர். அவர்கள் ஏற்கனவே வாங்கி வந்த மதுபானங்களை டம்ளரில் ஊற்றி குடித்தனர். சிலர் வெயிலுக்கு இதமாக கூலிங் பீர் வாங்கி வந்திருந்தனர். மாநாட்டு திடல் மைதானம், அருகிலுள்ள பகுதிகள் என எதையும் விட்டுவைக்காமல் திறந்தவெளி பார் என்பதைவிட நடமாடும் பார் என்பதைப்போல பல்வேறு இடங்களில் பலரையும் மதுபாட்டில்களுடன் காண முடிந்தது.

* காவலர் உத்தரவு மீறல்

மாநாட்டிற்கு வந்தவர்கள் ஆங்காங்கே சாலையை மறித்து பட்டாசுகளை வெடித்துக் கொண்டே இருந்தனர். இதனால் சாலைகளில் மணிக்கணக்கில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. டூவீலர்களில் வந்தவர்கள் அதிக சத்தம் கொண்ட ஹாரன்களை அடித்துக் கொண்ேட இருந்தனர். மேலும், போலீசார் விதித்திருந்த உத்தரவை மீறி பலர் காரின் கதவை பிடித்தும், கதவு வழியாகவும் வெளியே உடலை நீட்டியபடி விசிலடித்தபடியே ஆபத்தான முறையில் பயணித்தனர்

* சென்னையை சேர்ந்தவர் உட்பட2 பேர் பலி

தவெக மாநாட்டிற்கு சென்னை கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த பிரபாகரன் (33) வேனில் வந்தார். மாநாட்டு திடலுக்கு செல்லும் வழியில் மதுரை சக்கிமங்கலம் பகுதியில் சிறுநீர் கழித்தபோது திடீரென மயக்கமடைந்தார். உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்தாக தெரிவித்தனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்தவர் ரோஷன் (22). தவெக மாநாட்டிற்கு வந்தவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, முதலுதவி மையத்தில் சிகிச்சை பெற்று ஊருக்கு காரில் செல்லும் வழியில் மாரடைப்பில் இறந்தார்.

* பனை மரம் ஏறிய தொண்டர்

தவெகவின் 100 அடி உயர கொடிக்கம்பம் நேற்று முன்தினம் ஊன்றும் போது சாய்ந்து விழுந்தது. இதைத் தொடர்ந்து நேற்று 40 அடி உயரத்தில் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. மேலும், ஆபத்தை உணராமல் தொண்டர் ஒருவர், மாநாட்டு திடலில் இருந்த பனை மரத்தின் உச்சியில் ஏறி தொங்கிய நிலையில் இருந்தார். இதேபோல் மாநாடு மைதானத்திற்குள் இருந்த மின் கம்பங்கள், ஸ்பீக்கர் பாக்ஸ் பகுதி உள்ளிட்டவற்றின் மீது சிலர் ஏறி உட்கார்ந்து கொண்டனர்.

* தடுப்புகளில் கிரீஸ் தடவல்

மாநாட்டு திடல் வரிசையாக ரேக் போல பிரித்து வரிசைப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு ரேக்கிற்கும் இடையில் 10 அடி உயரத்திற்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், முன்பகுதிக்கு செல்ல வேண்டும் என்பதற்காக கட்சியினர் 10 அடி தடுப்புகளை தாண்டிக் குதித்து உள்ளே சென்று முன்வரிசையில் இடம் பிடித்தனர். விஜய் ராம்ப் வாக் செல்லும் பகுதியில் ஆட்கள் நடமாட்டமும், சேதமும் ஏற்பட்டதால், தடுப்பு கம்பிகளில் கிரீஸ் தடவி தாவிக்குதிப்பதை தடுத்தனர்.

* நான்கு ஆம்புலன்ஸ்கள் நெரிசலில் சிக்கி தவிப்பு

மாநாடு நடந்த மதுரை – தூத்துக்குடி நான்குவழிச்சாலையில் கடும் நெரிசல் இருந்தது. இதுதவிர, பாரப்பத்தி – மேலக்கோட்டை ரோட்டில் வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் ஒதுக்கி இருந்தநிலையில், இந்த சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மதுரை – திருநெல்வேலி நான்குவழிச்சாலையை வாகனங்கள் கடக்க முடியாமல் தவித்தன. இதில் 4 ஆம்புலன்ஸ்களும் செல்ல முடியாமல் தவித்தது.

* கோயிலுக்குள் மதுவுடன் வந்த தவெககாரர்

தவெக மாநாட்டிற்கு வந்திருந்த சிலர், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றனர். அவர்களிடம் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வழக்கமான சோதனைகளை மேற்கொண்டனர். அப்போது ஒருவர் மது பாட்டிலை உடைக்குள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அவரை தடுத்து நிறுத்திய போலீசார், எச்சரித்து திருப்பி அனுப்பினர். அப்போது அந்த நபர் வைத்திருந்த மது பாட்டில் கீழே விழுந்து உடைந்தது. இதனால் கோயில் வாசல் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

* உலமாக்கள் பிளக்ஸ் தவெகவுக்கு கண்டனம்

தவெக மாநில மாநாட்டிற்காக சில இடங்களில் உலமாக்கள் பெயரில் பிளக்ஸ், நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து மாநில அளவில் உலமாக்கள் பேரவையினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மதுரை உலமாக்கள் அமைப்பின் நிர்வாகிகள் கூறும்போது, ‘‘ஆலிம் என்பவர் இஸ்லாமிய மக்களின் மார்க்க பாதையின் வழிகாட்டி. சமுதாய களங்களில் கல்வி விழிப்புணர்வு உரையாற்றுவது வரை ஒரு ஆலிம் கல்விக்காக தன் வாழ்வையே அர்ப்பணிக்கிறார். அரசியல் லாபத்திற்காக பிளக்சில் உலமாக்கள் என்று போடுவதற்கு யார் இவர்களுக்கு அனுமதி கொடுத்தது? இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளனர்.

* தண்ணி வரலைங்க…தொட்டிகள் உடைப்பு

மாநாட்டில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பைப்லைன் பதித்து குழாய் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பல இடங்களில் குழாய்களில் தண்ணீர் வரவில்லை. இதனால் தொண்டர்கள் தண்ணீர் கேட்டு கூச்சலிட்டனர். இதைத் தொடர்ந்து பவுன்சர்கள் தண்ணீர் பாட்டில்களை கூட்டத்திற்குள் தூக்கி வீசினர். காலி பாட்டில்களை சிலர் மேடையை நோக்கி வீசினர். அதே நேரம் தண்ணீர் இல்லாததால் அங்கிருந்த தண்ணீர் தொட்டிகளை அடித்து உடைத்தனர்

* பள்ளி செல்ல வழியின்றி மாணவர்கள் பரிதவிப்பு

மாநாடு நடந்த பகுதியில் விருதுநகர் மாவட்ட எல்லையில் ஆவியூர் கிராமம் அமைந்துள்ளது. மாநாட்டை முன்னிட்டு இந்த தடத்தில் அதிகளவு வாகனங்கள் வந்ததால் அரசு பேருந்துகள் செல்ல முடியாததால் ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ-மாணவியர் பேருந்து கிடைக்காமல் பெரும் அவதிப்பட்டனர்.

* வெயிலுக்கு நீர்மோரு… காசு கேட்டால் தகராறு…

மாநாடு நடக்கும் பகுதியைச் சுற்றிலும் ஏராளமான ெபண்கள் பானைகளில் வைத்து மோர் விற்பனை செய்து கொண்டிருந்தனர். மோர் இலவசமாக கொடுப்பதாக நினைத்து மோரை வாங்கிக் குடித்த கட்சியினரிடம் பணம் கேட்டதால் மோர் விற்றவர்களிடம் தகராறு செய்தனர்.

* வந்தார் விஜய் கலைந்தது கூட்டம்

மாநாட்டிற்காக வந்த தொண்டர்கள் அக்கட்சியினர் தலைவர் விஜய் வந்தபோது கையசைத்தனர். ராம்ப் வாக் சென்றபோது உற்சாகமாக விசில் அடித்தனர். அவர் மேடையேறியது தான் தாமதம். உடனே பெரும்பகுதி கூட்டத்தினர் கலைந்து செல்லத் தொடங்கினர்.

* ராம்ப் வாக் சென்றபோது இளைஞர்கள் முற்றுகை

விஜய் ராம்ப் வாக் சென்றபோது கட்சி தொண்டர்கள் சிலர் கொடியை, கட்சி சின்னம் கொண்ட துண்டுகளை அவர் மீது வீசினர். சிலர் கட்டுப்பாட்டையும் மீறி மேலே ஏறினர். அப்போது உடன் வந்த பவுன்சர்கள், 2 கைகளிலும் கொத்துக் கொத்தாக ரசிகர்களை பிடித்து வெளியேற்றிக் கொண்டிருந்தனர்.

* டோல்கேட் கட்டணம் செலுத்தாமல் பயணம்

கார், வேன் மற்றும் பஸ்களில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த கட்சியினர் மதுரை மாநாட்டிற்கு வந்தனர். இவர்கள் பல்வேறு இடங்களில் உள்ள டோல்கேட்களில் கட்டணம் செலுத்தாமல் வந்துள்ளனர். சில இடங்களில் டோல்கேட்களில் நிற்காமல் டோல்கேட் சென்சார் தடுப்புகளை உடைத்துக் கொண்டு கட்டணம் செலுத்தாமல் சென்றுள்ளனர். மதுரை மாவட்டம் சிட்டம்பட்டி மற்றும் எலியார்பத்தி டோல்கேட் வழியாக தவெக மாநாட்டிற்கு சென்ற 90 சதவீத வாக னங்கள் டோல்கேட் கட்டணம் செலுத்தாமல் சென்றன.

* பெண்கள், குழந்தைகள் உட்பட 374 பேர் மயக்கம்

மதுரையில் நேற்று வெயில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக 102 டிகிரி வரை கொளுத்தி எடுத்தது. இதனால் கூட்டத்தில் இருந்த 374 தொண்டர்கள் மயங்கி விழுந்தனர். சிலருக்கு அங்குள்ள மருத்துவ உதவி மையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேல் சிகிச்சை தேவைப்படுவோர் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நீர்ச்சத்து குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்டவர்களில் 15க்கும் மேற்பட்டோர் வலையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டனர்.

நாமக்கல்லைச் சேர்ந்த தொண்டருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். இவரோடு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு 12 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், ஊட்டியைச் சேர்ந்த இளம்பெண் வெயிலில் இளைப்பு நோய் வந்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குழந்தைகள் சிலரும் மயங்கி விழுந்தனர். இதனால், மாநாட்டு மைதானத்திற்குள் ஆம்புலன்ஸ்கள் வருவதும், போவதுமாக இருந்தது.