பெண்கள் உலக கோப்பை செஸ் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் கோனெரு ஹம்பி – திவ்யா இன்று மோதுகிறார்கள்.
3- வயது ‘பிடே’ பெண்கள் உலக கோப்பை செஸ் போட்டி, ஜார்ஜியாவில் உள்ள பதுமி நகரில் நடந்து வருகிறது. 107 வீராங்கனைகள் பங்கேற்ற இந்த செஸ் திருவிழாவில் இந்தியாவின் கோனெரு ஹம்பி, திவ்யா தேஷ்முக் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளனர். திவ்யா அரை இறுதியில் முன்னாள் உலக சாம்பியன் சீனாவின் டான் ஜோங்யியை விரட்டி அடித்தார். கோனேரி ஹம்பி மற்றொரு சீன வீராங்கனை லீடிங்ஜியை டை பிரேகரில் தோற்கடித்தார்.

இந்த நிலையில் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் ஐந்தாவது இடம் வகிக்கும் கோனெரு ஹம்பி 18 ஆம் நிலை வீராங்கனை ஆன திவ்யா தேஷ்முக்கை இன்று எதிர்கொள்கிறார். யார் வெற்றி பெற்றாலும் முதல் முறையாக இந்தியாவுக்கு பெண்கள் உலக கோப்பை கிடைக்க இருப்பது பெருமையாகும்.
இறுதி சுற்று இரு ஆட்டங்களைக் கொண்டது. இதன் முதலாவது ஆட்டம் இன்றும் இரண்டாவது ஆட்டம் நாளையும் கிளாசிக்கல் முறையில் நடைபெறுகிறது. இதில் முதல் நாற்பது நகர்வுகளுக்கு 90 நிமிடமும் அதன் பிறகு எஞ்சிய போட்டிக்கு 30 நிமிடங்களும் மேலும் ஒவ்வொரு நகர்வுக்கும் கூடுதலாக 30 வினாடிகளும் வழங்கப்படும். போட்டி ஐந்து மணி நேரத்திற்கு மேல் நீடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு தொடங்குகிறது. இரு ஆட்டத்தின் முடி
வில் சமநிலை ஏற்பட்டால் ஆட்டம் டை பிரேக்கருக்கு செல்லும்.
28ஆம் தேதி நடைபெறும் டை பிரேக்கரில் அதிவேகமாக காய்களை நகர்த்தும் முறை கடைபிடிக்கப்படும். டை பிரேக்கரில் முதலில் இரு ஆட்டங்களில் மோத வேண்டும். அதிலும் சமநிலை நீடித்தால் தொடர்ந்து மேலும் இது வாய்ப்புகள் வீதம் வழங்கப்படும் இதன் அடிப்படையில் முடிவு காணப்படும்.
ஆந்திராவை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் 38 வயதான கோனெரு ஹம்பி ஏற்கனவே உலக ரேப்பிட் செஸ் போட்டியில் பட்டம் வென்றிருக்கிறார். 25 ஆண்டுகளாக செஸ் விளையாடி வருகிறார். அவர் கூறுகையில் செஸ் ரசிகர்களுக்கு இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். ஏனெனில் இந்த சாம்பியன் பட்டம் இந்தியாவுக்கு தான் என்பது உறுதியாகிவிட்டது. ஆனால் ஒரு வீராங்கனையாக நாளைய ஆட்டம் மிகவும் கடினமாக இருக்கப் போகிறது ஏனெனில் திவ்யா இந்த தொடர் முழுவதும் வியப்புக்குரிய வகையில் விளையாடியிருக்கிறார் என்றார்.
பதற்றமின்றி பொறுமையாக ஆடுவது ஹம்பியின் பலம். மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த 19 வயதான திவ்யா தாக்குதல் பாணியில் ஆட கூடியவர். அனுபவமும் இளமையும் கோதாவில் குதிக்கும் இந்த போட்டியில் வெற்றிக்கனியை பறிக்க போவது யார்? என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
பட்டம் வெல்லும் வீராங்கனைக்கு ரூ.43 1/4 இலட்சமும் இரண்டாவது இடத்தை பிடிக்கும் வீராங்கனைக்கு ரூ.30 1/4 லட்சமும் பரிசு தொகையாக வழங்கப்படும்.






