தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலை நிலவுகிறதா? அரசுக்கு சென்னை உயர் நீதி மன்றம் கேள்வி!

சென்னை, ஜூன்.25-தமிழகத்தில் நிதி நெருக்கடி நிலை நிலவுகிறதா? என சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை உயர்நீதி மன்றத்தில் கே.டி.வி. நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ், சமையல் எண்ணெய் கொள் முதல் செய்வதற் கான டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டரில் கலந்து கொண்டு ஒப்பந்தம் பெற்ற எங்களது நிறுவனம், சமையல் எண்ணெய்யை சப்ளை செய்தது. இந்த வகையில் 141 கோடியே 22 லட்சம் ரூபாய் அரசு எங்கள் நிறுவனத்துக்கு வழங்க வேண்டியுள்ளது. டெண்டர் நிபந்தனைப் படி 30 நாட்களில் இந்த தொகையை வழங்க வேண்டும். எனவே, நிலுவைத் தொகையை வழங்க உத்தர விட வேண்டும்,” என கூறியிருந்தது.இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணை க்கு வந்தது. அப்போது கே.டி.வி. நிறுவனம் தரப்பில்,“தொடர்ந்து சமையல் எண்ணெய் சப்ளை செய்து வருவதால் இத் தொகை 200 கோடி ரூபாய்க்கு மேல் அரசு தர வேண்டியுள்ளது. நிலுவைத் தொகையை வழங்காமல் அரசு அடுத்த டெண்டர் கோரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது,” என்று தெரிவிக்கப் பட்டது.இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, “கடந்த இரு வாரங்களாக ஓய்வுக்கால பலன்கள், அரசு வழங்க வேண்டிய தொகைகள் வழங்கப்படவில்லை என வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.மாநிலத்தில் என்ன நடக்கிறது? மாநில அரசு முன்னுதாரணமாக
திகழ வேண்டும். இது போன்ற வழங்க வேண்டிய தொகைகளை வழங்காமல் இருப்பது எதைக் காட்டுகிறது?இந்த தொகைகளை வழங்க வேண்டாம் என அரசு இருக்கிறதா? அல்லது மாநிலத்தில் நிதி நெருக்கடி நிலை நிலவுகிறதா? என கேள்விகளை எழுப்பினார். இது அரசை நடத்தும் வழியல்ல. நீதிமன்றத்தின் இந்த எண்ணத்தை மாற்ற வேண்டும்,” என நீதிபதி கருத்து தெரிவித்தார்.பின்னர், இந்த வழக்கில் மனு தாரருக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்குவது குறித்து அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்க அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை
ஜூன் 27ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.