4 வழிச்சாலை அமைக்கும் போது சுடுகாடு இருந்த இடத்தில் சாலை அமைத்துவிட்டதால் இறந்தவரை புதைக்க இடமில்லை?

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள கொல்லப்பட்டி கிராம மக்கள் ஊரில் யாராவது இறந்துவிட்டால் ஊருக்கு முன்பிருந்த சுடுகாட்டில் பிணத்தை புதைத்து வந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் 4 வழிச்சாலை அமைக்கும் போது சுடுகாடு இருந்த இடத்தில் சாலை அமைத்துவிட்டனர். அதனால் இப்போது இறந்தவரை புதைக்க இடமில்லாமல் அவதிபடுகின்றனர்.
இந்நிலையில் நேற்றைக்கு முன்தினம் இரவு நடராஜன் என்பவர் இறந்துவிட்டார். இதற்கு முன்பு நடராஜனின் தாயார் இறந்த போதும் புதைக்க சுடுகாடு இல்லாததால் அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது சாக்கு, போக்கு  சொல்லியதால் வேறு இடத்தில் புதைத்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளாக சுடுகாட்டிற்கு இடம் கேட்டு வந்தநிலையில், நடராஜன் இறந்ததால் புதைக்க இடம் கேட்டும், இடம் தரவில்லை என்றால் பிணத்தை புதைப்பதில்லை என்று கூறியுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த தேன்கனிக்கோட்டை தாசில்தார் கோகுல்நாத், ஆர்.ஐ.பசவராஜ், ராயக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியதம்பி, கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கேசவ மூர்த்தி. கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் திமுக சின்ராஜ். ஆகியோர் கொல்லப்பட்டிக்கு சென்று சுடுகாட்டு இடத்தை தேர்வு செய்தனர். அந்த இடத்திற்கு அருகாமையிலுள்ள குடியிருப்பு வாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி.ஆனந்தராஜ் மற்றும் ஏடிஎஸ்பி.சங்கர் ஆகியோர் இறந்தவரின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடந்த போதும் உயர் அதிகாரிகள் வந்து இடம் காட்டும் வரை ஒயமாட்டோம் என கூறியதின் பேரில், இன்று மாவட்ட ஆதிதிராவிடர் நல அதிகாரிவந்து இடத்தை தேர்வு செய்வார் என உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டனர்.
இறந்த நடராஜனின் உடலை காவல்துறையினரின் சார்பில் ஒசூர் மின்மயானத்திற்கு அனுப்பிவைத்தனர்.