மதுரை,
18-10-2024
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மூளை, நரம்பியல் அறுவை சிகிச்சையில் நவீன ‘இன்டர்வென்ஷனல் கேத்லேப்’ சிகிச்சை குறித்த அத்துறை சார்ந்த டாக்டர்களுக்கு 3 நாள் பயிற்சி மற்றும் செயல்முறை வகுப்புகள் நடத்த உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து மீனாட்சி மிஷன் மருத்துவமனை இன்டர்வென்ஷனல் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கவுதம் குஞ்சா, இன்டர்வென்ஷனல் கதிர்வீச்சு துறை தலைவர் டாக்டர் முகுந்தராஜன், அறுவை சிகிச்சை துறை டாக்டர் செல்வ முத்துக்குமரன் ஆகியோர் கூறியதாவது:
அறுவை சிகிச்சை துறையில் பல்வேறு நவீன பரினாம வளர்ச்சிகள் வந்துள்ளன. 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை இருதய அறுவை சிகிச்சையில் இருந்த திறந்த நிலை அறுவை சிகிச்சை மாறி ஆஞ்சியோகிராம் ‘ஸ்டாண்ட்’ வைத்தல் போன்ற வளர்ச்சிகள் அடைந்தது. இது இருதய அறுவை சிகிச்சையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
அதேபோல உலக மருத்துவ வரலாற்றில் தற்போது மூளை நரம்பியல் துறையிலும் ‘இன்டர்வென்ஷனல் பைப்ளேன் கேத்லேப்’ சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மூளையில் ஏற்படும் ரத்த கசிவு, ஏவிஎம், ரத்தக்குழாய் கட்டிகள், சிலந்தி வலை போன்ற வீக்கம் போன்ற பிரச்சனைகளால் மூளை நரம்புகள் செயலிழக்க துவங்குகின்றன. இதனால் பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. தலைவலி, காதுகளில் இரைச்சல் போன்றவை இதன் அறிகுறிகளாகும். இது போன்ற அறிகுறிகள் தென்படும் போது நோயாளிகள் டாக்டர்களிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
ரத்த கசிவு, இரத்தக் குழாய்களில் ஏற்படும் கட்டி, அன்யூரிசம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் போது நோயாளிகளின் மண்டை ஓட்டை பிளந்து அறுவை சிகிச்சை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. இருதய அறுவை சிகிச்சைக்கு ‘ஓபன் ஹார்ட் சர்ஜரி’ மாறி ஆஞ்சியோகிராம் எப்படி வந்ததோ அதேபோன்று மூளை அறுவை சிகிச்சையிலும் ‘நியூரோ இன்டர்வென்ஷனல்’ அறுவை சிகிச்சை முறை வந்துள்ளது.
இந்த புதிய அறுவை சிகிச்சை முறை தமிழகத்தில் சென்னையில் ஒரு சில மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்படுகின்றன. அதற்கு அடுத்தார் போல் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இந்த நியூரோ இன்டர்வென்ஷனல் அறுவை சிகிச்சை கொண்டுவரப்பட்டுள்ளது. இருதய ஆஞ்சியோகிராம் போன்று இதற்கும் கால் தொடை பகுதியில் உள்ள நரம்புகள் வழியாக ‘ஸ்டண்ட்” மற்றும் பிரத்யோக உலோகத்தை கொண்டு சென்று பாதிக்கப்பட்ட பகுதியில் பொருத்தப்படுகிறது. இதனால் நோயாளிகள் நீண்ட நாட்கள் ஆஸ்பத்திரி தங்கி சிகிச்சை பெறும் நேரம் குறைக்கப்படுவதுடன், நோயாளிகள் நீண்ட நாட்கள் மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
இந்த அறுவை சிகிச்சை முறையை தமிழகத்தில் உள்ள அனைத்து நரம்பியல் துறை டாக்டர்களும் தெரிந்து கொள்ள வேண்டும், தமிழகத்தின் மூன்றாவது நிலையில் உள்ள ஆஸ்பத்திரிகளிலும் இந்த நவீன சிகிச்சை முறையை கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்திற்காக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் 3 நாட்கள் அத்துறை சார்ந்த டாக்டர்களுக்கு இன்டர்வென்ஷனல் கேத்லேப் குறித்த 3 நாள் பயிற்சி வகுப்பு மற்றும் அறுவை சிகிச்சை நேரடி செயல்முறை அளிக்கப்படுகிறது. இதில் தென் தமிழகம் மட்டுமல்லாது திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம், வேலூர் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள மூளை நரம்பியல் துறை டாக்டர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
மதுரை மாவட்ட செய்தியாளர்
பாலகிருஷ்ணன்.






