”மாநிலங்களின் கல்வி உரிமையை பறிப்பது, மணிமேகலையின் கையில் இருக்கும் அட்சயப் பாத்திரத்தைப் பிடுங்கிக் கொண்டு பிச்சைப் பாத்திரத்தைக் கொடுப்பதுபோல் உள்ளது” என, தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் கனிமொழி பேசியுள்ளார்.
டெல்லி மக்களவையில் தமிழில் பேசிய தி.மு.க மக்களவைக் குழுத்தலைவரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் உறுப்பினருமான கனிமொழி, ”மத்திய பட்ஜெட்டில் கல்விக்காக உரிய நிதியை பா.ஜ.க அரசு ஒதுக்கவில்லை. கல்விக்காக மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை மத்திய அரசு குறைத்து கொண்டே வருகிறது. கல்விக்காக அதிக நிதி ஒதுக்குவது மாநில அரசுகள்தான். அதே மாநில அரசுகள்தான் கல்விக்காக 50% நிதியை வழங்குகின்றன. புதிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் மாநிலத்துக்கு நிதி தருவோம் என கூற மத்திய அரசுக்கு அதிகாரம் தந்தது யார்?
மணிமேகலையின் கையில் இருக்கும் அட்சய பாத்திரத்தை பிடுங்கிக்கொண்டு பிச்சை பாத்திரத்தை கொடுப்பதுபோல் உள்ளது மத்திய அரசின்பட்ஜெட். தமிழ்நாட்டிற்கு கல்விக்கு உரிய நிதி ஒதுக்கவில்லை. குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போது மாநில உரிமைகள் பற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இப்போது மாநில உரிமைகளை பறிக்கிறார். பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்த முதல் மாநிலம் தமிழ்நாடுதான். தமிழ்நாட்டில் தற்போது காலை உணவுத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அமல்படுத்தியுள்ளார்.






