புவனகிரி பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான மூட்டைகள் தேக்கம்

புவனகிரி பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான மூட்டைகள் தேக்கம்,அரசின் அதிகாரிகள் அமைதி.. விவசாயிகள் வேதனை.

கடலூர் மாவட்டம் புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட தாலுகாக்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் ஏராளமாக செயல்பட்டு வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் ஆயிரக்கணக்கான அளவில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. போதுமான சேமிப்பு கிடங்கு வசதி இல்லாததால் இவை சேமிப்பு கிடங்கிற்க்கு எடுத்துச் செல்வதற்கு அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இப்பகுதிகளில் இருந்த திறந்தவெளி நெல் மூட்டை சேமிப்பு கிடங்குகள் தற்போது பயன்படுத்தப்படாத நிலையில், நெல் கொள்முதல் நிலையங்களிலேயே நெல் மூட்டைகள் தேங்கி இருக்கிறது. இவை சேதம் அடைந்தும் வருகிறது. இதனால் புதிதாக நெல் கொள்முதல் செய்வதற்கும் காலதாமதம் ஏற்படுவதால் நெல்லை விற்பனை செய்வதற்காக எடுத்து வந்துள்ள விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப் படுகின்றனர். அவர்களின் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை தரையில் கொட்டி வைத்தும் காத்திருக்கின்றனர். உடனடியாக அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியிருக்கும் நெல் மூட்டைகளை சேமிப்பு கிடங்கிற்க்கு எடுத்துச் செல்ல வேண்டும்.விவசாயிகளின் நெல்லை விரைவாக கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேதனையோடு கோரிக்கை வைத்து வருகின்றனர். முக்கியமாக பாதுகாப்பான நெல் சேமிப்பு கிடங்குகள் கட்டும் பணிகள் தொடங்கப்படாமலும், அவை ஆமை வேகத்திலும் பணிகள் நடைபெற்று வருவதால் இந்த நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்திருக்கிறது. இதனால் கொள்முதல் செய்யப்பட்ட நெல் வீணாகுவதோடு, புதிதாக கொள்முதல் செய்யப்பட வேண்டிய விவசாயிகளின் நெல்லும் பாதிப்படைந்து வருகிறது என விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.

செய்தியாளர் ஸ்ரீமுஷ்ணம் சண்முகம்