ஓய்வுக்குப்பின் வழங்கப்படும் பணிக்கொடை உயர்வு அரசு ஊழியர்களுக்கு ₹25 லட்சம் நிதி!

*தமிழ்நாடு அரசு அறிவிப்பு * ஜனவரி 1 முன் தேதியிட்டு அமல்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வு காலம் மற்றும் இறப்புக்குப் பின் வழங்கப்படும் பணி கொடை ரூபாய் 20 லட்சத்திலிருந்து ரூபாய் 25 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இந்த உயர்வு 2024 ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றும், இந்த அறிவிப்பின் மூலம் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் ஓய்வு பெற்ற தமிழக அரசு ஊழியர்கள் பயனடைவார்கள் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக நிதி துறை செயலாளர் உதயச்சந்திரன் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள விரிவான அரசாணையில், தமிழக அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையின்படி ஓய்வு கால பணிக்கொடை மற்றும் இறப்பு பணிக்கொடை ஆகியவை 2016 ஜனவரி 1-ம் தேதி கணக்கிட்டு ரூபாய் பத்து லட்சத்திலிருந்து ரூபாய் 20 லட்சம் ஆக உயர்த்தியது அதிகபட்ச பணிக்கொடை தொகையிலிருந்து 25% அதாவது ரூபாய் 20 லட்சத்திற்கு ரூபாய் 5 லட்சம் என்ற அளவில் அகவிலை படியின் அளவு 50% தாண்டும்போது பணிக்கொடை உயர்த்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. இதை அடுத்து கடந்த ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி அரசு ஊழியர்கள் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் ஒன்றிய அரசு அனுப்பிய கடிதத்தில் இந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் ஏழாவது சம்பள கமிஷனில் பரிந்துரைப்படி ஓய்வு கால பணிக்கொடை மற்றும் இறப்பு கால பணிக்கொடை ரூபாய் 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தது இதன் அடிப்படையில் தமிழக அரசும் பணிக்கொடை உச்சவரம்பை ரூபாய் 20 லட்சத்திலிருந்து ரூபாய் 25 லட்சம் ஆக உயர்த்த முடிவெடுத்துள்ளது என்று உதயசந்திரன் தனது அரசாணையில் கூறியுள்ளார். இந்த உயர்வு 2024 ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது என்றும் இதன் மூலம் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் ஓய்வு பெற்ற தமிழக அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருவூலம் மற்றும் கணக்கு துறை கமிஷனர் தகுந்த உத்தரவுகளை கருவூல அதிகாரிகள், சார் கருவூல அதிகாரிகள், ஓய்வூதிய வளங்கல் அதிகாரிகளுக்கு வழங்கி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கான பணிக்கொடையை கணக்கிட்டு வழங்க வேண்டும் என்றும் நிதித்துறை செயலாளர் உதயச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார். தமிழக அரசின் இந்த உத்தரவின் மூலம் ஏராளமான ஓய்வு அலுவலர்கள் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.