தமிழக முதல்வர் ஜோசப் விஜய்தான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்ற கருத்து பரவும் விவகாரத்தில் தமிழக அமைச்சர்களும் இன்னமும் தொண்டர்கள் மனநிலையில் தற்போதும் இருக்கிறார்கள் என தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று இரவு கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது விஜய்பிரதமர் வேட்பாளர் என தவெகவினர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் பழைய நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கி விட்டதா என்று செய்தியாளர்கள் கேள்விக்கு, “நாங்கள்
பின் வாங்கவில்லை. அது இப்போது தேவையற்றது. பிரதமர் நிலைப்பாட்டை பற்றி பேசக்கூடிய காலம் கிடையாது. தமிழக வெற்றி கழகத்தில் உள்ள முன்னணி தலைவர்கள் யாரும் விஜய் தான் பிரதமர் வேட்பாளர் என சொல்லவில்லை” என தெரிவித்தார்.
அமைச்சர்களே விஜய் பிரதமர் வேட்பாளர் என்று பேசுகின்றனரே என்ற கேள்விக்கு, “அமைச்சர்கள் இன்னும் தொண்டர் மனநிலையில் தான் இருக்கிறார்கள், அமைச்சர்களாக இருந்தாலும் அவர்கள் தொண்டர்களாகவே இருக்கிறார்கள். ஆர்வத்தில் அவர்கள் வெளிப்படுத்துவதை அவர்கள் கட்சியின் நிலைப்பாடாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதை பெரிய விஷயமாக விவாதிக்க அவசியமில்லை. வட இந்திய ஊடகங்கள் சம்மந்தமே இல்லாமல் விஜய்யை பிரதமர் போட்டியில் சேர்த்துள்ளனர் . அடுத்த பிரதமர் ராகுல்காந்தியா? மோடியா ? என்பதில் சீனியர் லீடர்களை சேர்த்து இருக்க வேண்டும். ஆனால் வம்பு இழுப்பதற்காகவோ அல்லது அரசியல் பின்னணியுடன் செயல்படலாம். அதே சமயம் விஜயை இந்த போட்டியில் சேர்த்து 9 சதவீதம் என சொன்னதால் தவெகவினர் அதை கொண்டாடுகின்றனர்.
அதற்கு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தவெக செயல்படுவது என்ற பொருள் கிடையாது . ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் இல்லை என்று யாராவது சொன்னார்களா? அதைப் பேச வேண்டிய நேரத்தில் பேசுகின்றோம் எல்லா நேரத்திலும் ஏன் பேச வேண்டும். 2029 தேர்தல் வரட்டும், அப்போது கேளுங்கள்” என தெரிவித்தார்.






