11 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது
நெல்லை, செப்.5:
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே திருவிருத்தான்புள்ளி–வேலியார்குளம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமன் நாராயணசுவாமி திருத்தாங்கலின் ஆவணிப் பெருந்திருவிழா நேற்று திருநாமக் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆண்டுதோறும் 11 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும் இத்திருவிழா, இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெறுகிறது. தொடர்ந்து வரும் செப்டம்பர் 14-ம் தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது.
திருவிழா நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை மற்றும் தர்மம், மதியம் 12 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு மற்றும் தர்மம், இரவு 7 மணிக்கு பணிவிடை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
வரும் செப்டம்பர் 11-ம் தேதி 8-ம் நாள் திருவிழாவில் அய்யா கருட வாகனத்திலும், 12-ம் தேதி 9-ம் நாள் திருவிழாவில் குதிரை வாகனத்திலும், 13-ம் தேதி 10-ம் நாள் திருவிழாவில் ஹனுமான் வாகனத்திலும் பவனி வருகிறார். அப்போது சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுருள் பெறும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
சிகர நிகழ்ச்சி
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக செப்டம்பர் 14-ம் தேதி அய்யா இந்திர வாகனத்தில் பவனி வருகிறார். வாகன பவனியைத் தொடர்ந்து அய்யாவை நாகத்தொட்டில் ஊஞ்சலில் வைத்து தாலாட்டும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை தாங்கல் நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.






