குறுவை பாதித்த நிலையில் சம்பா சாகுபடி கைகொடுக்குமா? மேட்டூர் அணையில் இருந்து 80 நாள் தாமதமாக நீர்திறப்பு: முதல்வர் விஜய் திறந்து வைத்து மலர் தூவினார்

* கடைமடை வரை சென்று சேருமா? விவசாயிகள் கவலை

மேட்டூர்: மேட்டூர் அணையிலிருந்து தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், நீர் இருப்பு மிகவும் குறைவாக உள்ளதால் காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி முழுமை பெறுமா? என்ற கேள்வி விவசாயிகளிடையே எழுந்துள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், பெரம்பலூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால், பருவமழையை எதிர்நோக்கி ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்.

குறுவை, சம்பா, தாளடி சாகுபடிக்காக ஜனவரி 28 வரை 230 நாட்களுக்கு 330 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். பாசன பகுதிகளில் மழை பெய்தால், பாசன தேவை குறையும். கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளிலும் ஒவ்வொரு முறையும் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஜூன் 12ம் தேதி மேட்டூர் சென்று தண்ணீர் திறந்து விடுவார். ஒரு சில ஆண்டுகளில் முன்கூட்டியே மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதனால், டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டு 6.31 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றது. ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணை குறித்த காலத்தில் திறக்கப்படவில்லை, போதிய மழையும் இல்லை. இதனால் இந்த ஆண்டு குறுவை சாகுபடி 3 லட்சம் ஏக்கரில் தான் செய்யப்பட்டுள்ளது.

தற்போது வரை சுமார் 1.40 லட்சம் ஏக்கரில் மட்டுமே நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பயிர்கள் அனைத்துக்கும் ஆழ்குழாய் தண்ணீர் மூலமே பாசனம் செய்யப்பட்டு வருகிறது. குறுவை சாகுபடியே அடியோடு பாதிக்கப்படும் நிலை உள்ளது. இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் டெல்டா மாவட்டம் முழுவதும் மொத்தமாக சுமார் 9.76 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடைபெற்றது. அதேபோல் இலக்கை தாண்டி கடந்த ஆண்டு 6 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டது. சம்பா சாகுபடி பணிகள் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தொடங்கி அதற்கான அறுவடை பணிகள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெறும். இயல்பாகவே அக்டோபர் மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கும்.

மழை நீர் மற்றும் ஆற்று நீரை பயன்படுத்தி சம்பா விதை விதைக்க தொடங்கப்படும். ஆனால், இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே போதுமான அளவிற்கு மழை பெய்யவில்லை. காவிரியில் தண்ணீரும் திறக்கவில்லை. பம்பு செட் மட்டுமே நம்பி சம்பா சாகுபடியில் இறங்க முடியாது. மழைநீர் மற்றும் ஆற்றுப் பாசனம் ஆகிய இரண்டும் சரியான முறையில் இருந்தால் மட்டுமே சாகுபடியை தொடங்கலாம். இந்த ஆண்டு குறுவை சாகுபடியே குளறுபடியாக இருக்கும் தருணத்தில் சம்பா சாகுபடி பணியை தொடங்குவோமா அல்லது மாற்று தொழிலுக்கு செல்வோமா என விவசாயிகள் மத்தியில் குழப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில், கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டியதால் பாசனத்திற்கு நீர்திறக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று மேட்டூர் அணையின் வரலாற்றில் 93வது ஆண்டாக காவிரி டெல்டா பாசனத்திற்காக அணையின் வலது கரையில் மேல்மட்ட மதகுகளை மின்விசை மூலம் இயக்கி பாசனத்துக்கு நீரை முதல்வர் விஜய் திறந்து வைத்தார். தொடர்ந்து முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் மதகுகள் வழியாக சீறிப்பாய்ந்த நீரில் மலர் தூவினர். மேட்டூர் அணையில் இருந்து 80 நாட்கள் தாமதமாக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், நீர் இருப்பு மிகவும் குறைந்த அளவாக 54.45 டிஎம்சியாக மட்டுமே உள்ளது. இதில் 9.60 டிஎம்சி தண்ணீர் மேட்டூர் அணையில் உள்ள மீன்வளத்தை பாதுகாக்கவும், குடிநீர் திட்டங்களுக்கும் இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும்.

மீதமுள்ள 44 டிஎம்சி தண்ணீரை மட்டுமே பாசனத்திற்கு திறக்க முடியும். மேட்டூர் அணைக்கு தற்போது விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக மட்டுமே நீர்வரத்து உள்ள நிலையில், காவிரி டெல்டாவிற்கு விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டால் மட்டுமே கடைமடை வரை தண்ணீர் சென்று சேரும். இல்லையெனில், கடைமடைக்கு தண்ணீர் சேர்வதில் சிக்கல் ஏற்படும். அவ்வாறு திறந்தால், 4 நாட்களுக்கு 5 டிஎம்சி வீதம் நீர் இருப்பு குறையும். இதனால், சம்பா சாகுபடி முழுமை பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பருவமழை தவறி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்தால், சம்பா சாகுபடி முழுமை பெறாது. விவசாயிகள் விதைப்பு, களையெடுப்பு உள்ளிட்ட முதலீடுகளை பெருமளவில் இழந்து நஷ்டத்தை சந்திக்க நேரிடும். சம்பா சாகுபடியே முழுமை பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் தாளடி சாகுபடி சாத்தியமாகுமா என்ற அச்சமும் விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது.

120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை

மேட்டூர் அணையில் இருந்து 45 நாட்களுக்கு மட்டுமே நீர்திறக்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த அவகாசம் சம்பா பயிர்களை காக்க போதாது என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். நீண்டகால சம்பா நெல் சாகுபடிக்கு குறைந்தபட்சம் 120 முதல் 150 நாட்கள் வரை தடையற்ற நீர் விநியோகம் தேவைப்படுகிறது. தற்போதைய 45 நாட்கள் அறிவிப்பு பயிர்கள் வளர்வதற்குள் முடிந்துவிடும். எனவே மேட்டூர் அணையில் இருந்து சம்பா சாகுபடிக்காக 120 நாட்களுக்காவது தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று டெல்டா பகுதி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.