திருச்சியில் 100 ஏக்கரில் உலர் துறைமுகம் அமைக்க வாய்ப்பு ஒன்றிய அரசு கோரிக்கையை தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு அனுப்பியுள்ளது – துரை வைகோ எம்.பி. பேட்டி

திருச்சி, செப். 1:
திருச்சியில் உலர் துறைமுகம் (Dry Port) அமைப்பது தொடர்பான தனது கோரிக்கையை ஒன்றிய அரசு, தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு அனுப்பியுள்ளதாகவும், இதற்கான உள்கட்டமைப்பு திட்டத்தை தமிழக அரசு தயாரித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் திருச்சி மக்களவை உறுப்பினர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.


திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ எம்.பி. கூறியதாவது:
திருச்சியில் உலர் துறைமுகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இதுதொடர்பாக ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், சர்பானந்தா சோனோவால், பியூஸ் கோயல் உள்ளிட்ட பலரை அவ்வப்போது சந்தித்து பேசியுள்ளேன்.
திருச்சியில் உலர் துறைமுகம் அமைப்பது மிகவும் நல்ல முடிவு என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், தமிழக அரசிடம் இருந்து ஒன்றிய அரசுக்கு இதுதொடர்பாக எந்தவொரு திட்ட முன்மொழிவும் வரவில்லை என அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், நாட்டின் முக்கிய துறைமுகங்களுக்கு தமிழ்நாடு நெருக்கமாக இருப்பதால், புதிய உலர் துறைமுகங்கள் அமைப்பதில் தமிழ்நாடு ‘Red Zone’ என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிறப்பு வழக்காக கருதப்பட்டால் மட்டுமே புதிய உலர் துறைமுகம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தொழில் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சிக்கு முக்கியத்துவம்
திருச்சியில் உலர் துறைமுகம் அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஒன்றிய அரசிடம் விரிவாக எடுத்துரைத்தேன். குறிப்பாக, உலர் துறைமுகம் அமைக்கப்பட்டால் திருச்சி மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொழில் வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகள் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என்பதையும் விளக்கினேன்.
இதையடுத்து, திருச்சியில் உலர் துறைமுகம் அமைக்கும் திட்டத்தை பரிசீலனையில் இருப்பதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி அளித்தார். தமிழக முதலமைச்சர் விஜயை சந்தித்தபோதும் இந்த கோரிக்கையை அவரிடம் எடுத்துரைத்தேன்.
இந்த நிலையில், தற்போது ஒன்றிய நிதி அமைச்சகத்திடம் இருந்து எனக்கு அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, திருச்சியில் உலர் துறைமுகம் அமைக்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு ஒன்றிய அரசு சார்பில் அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலர் துறைமுகத்திற்கான தேவையான உள்கட்டமைப்பு திட்டத்தை தமிழக அரசு திட்டமிட்டு தொடங்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
2,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு
ஒன்றிய அரசும் தமிழக அரசும் இணைந்து இந்த திட்டத்தை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். தமிழக அரசு விரைந்து நிலத்தை அடையாளம் கண்டு, அதுகுறித்த தகவல்களை ஒன்றிய அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.

திருச்சியில் உலர் துறைமுகம் அமைக்கப்பட்டால், தொழில் முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்க முடியும். இதன் மூலம் நேரடியாக சுமார் 2,000 பேருக்கும், மறைமுகமாக சுமார் 10 ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு உருவாகும்.
மேலும், உலர் துறைமுகம் அமைந்தால் அதனைச் சுற்றி பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் உருவாகும் வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம் கூடுதல் வேலைவாய்ப்புகளும் உருவாகும்.
100 ஏக்கரில் அமைக்க வேண்டும்
ஏற்கனவே திருப்பூரில் சுமார் 21 ஏக்கர் பரப்பளவில் உலர் துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அதேபோல் திருச்சியிலும் உலர் துறைமுகம் அமைக்க முடியும்.
ஆனால், அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொழில் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சியை கருத்தில் கொண்டு, திருச்சியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உலர் துறைமுகம் அமைத்தால் சிறப்பாக இருக்கும்.
இதற்கான சில இடங்கள் திருச்சி மாவட்டத்தில் உள்ளன. அந்த இடங்கள் குறித்த தகவல்களை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளேன்.
எனவே, தமிழக அரசு இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, விரைந்து நிலத்தை அடையாளம் காண்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். திருச்சியில் உலர் துறைமுகம் அமைந்தால், திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் தொழில், வர்த்தகம் மற்றும் ஏற்றுமதி துறைகளுக்கும் மிகப்பெரிய பயன் கிடைக்கும்.
இவ்வாறு துரை வைகோ எம்.பி. தெரிவித்தார்.