நேபாளத்தில் நடந்த வெள்ளப்பெருக்கு போல இமயமலை பனிப்பாறை ஏரிகளால் இந்தியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து: ஆய்வு, தயார்நிலை குறித்த விவாதங்கள் தீவிரம்

* இமயமலைத் தொடர்களில் மொத்தம் 7,500 பனிப்பாறை ஏரிகள் உள்ளன.

* இதில் 200க்கும் மேற்பட்டவை அதிக ஆபத்துடைய பனிப்பாறை ஏரிகள் என்று கண்டறியப்பட்டுள்ளது.

* சிக்கிமில் மட்டும் 25 ஆபத்தான பனிப்பாறை ஏரிகள் இருக்கின்றன.

* சமீபத்தில் இந்தியா சந்தித்த மிக மோசமான பனிப்பாறை ஏரி உடைப்பு வெள்ள சம்பவம் 2023 அக்டோபர் 3ம் தேதி நடந்தது.

தெற்காசிய கலாச்சாரத்தை அறிதல்

* சிக்கிமில் உள்ள தென் லோனக் ஏரியில் நள்ளிரவு நேரத்தில் 14.7 கனமீட்டர் அளவுள்ள பனிப்பாறைகள் சரிந்து விழுந்தன.

* இதனால் 20 மீட்டர் உயரமுள்ள அலைகள் உருவாகி ஆற்றில் ஓடி பல நீர்மின் நிலையங்கள் குடியிருப்புகளை அழித்தது.

புதுடெல்லி: நேபாளத்தில் நடந்த வெள்ளப்பெருக்கை தொடர்ந்து, இமயமலையில் உள்ள பனிப்பாறை ஏரிகளால் இந்தியாவுக்கு காத்திருக்கும் ஆபத்துகள் குறித்த கவலைகள் தீவிரமடைந்துள்ளன.

நேபாளம்-திபெத் எல்லையில் பனிப்பாறை ஏரி உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மிக மோசமான சேதத்தை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கான மக்களை பலி கொண்ட இந்த பனிப்பாறை ஏரி உடைப்பு வெள்ளம், பல கோடி மதிப்பிலான சொத்துக்களை சேதப்படுத்தி உள்ளது. இமயமலையில் இயற்கையாக உருவான பனிப்பாறை ஏரி உடைந்தால் அதன் விளைவு எவ்வளவு கோரமாக இருக்கும் என்பதை இந்த சம்பவம் உலகிற்கு காட்டி உள்ளது.

ஆனால் இதுபோன்ற அதிக ஆபத்துடைய பனிப்பாறை ஏரிகள் இமயமலையில் 200க்கும் மேற்பட்டவை இருப்பது பெரும் கவலைகளை தூண்டி உள்ளது. இந்த பேரழிவு அபாயங்களை குறைப்பதற்கான இந்தியாவின் உத்தி மற்றும் தயார்நிலை குறித்த விவாதத்தையும் இது தீவிரப்படுத்தி உள்ளது.ஒன்றிய அரசின் ஆய்வின்படி, இமயமலைத் தொடர்களில் மொத்தம் 7,500 பனிப்பாறை ஏரிகள் உள்ளன. இதில் 10 சதவீதம் சிக்கிம் மாநிலத்தில் அமைந்துள்ளன. மேலும் அவற்றில் 25 ஏரிகள் மிக அதிக ஆபத்துடைவையாக கருதப்படுகின்றன. இந்த ஆய்வில் 4,700 பனிப்பாறை ஏரிகள் கங்கை நதிப்படுகையில் அமைந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்தியா சந்தித்த மிக மோசமான பனிப்பாறை ஏரி உடைப்பு வெள்ள சம்பவம் 2023 அக்டோபர் 3ம் தேதி நடந்தது. சிக்கிமில் உள்ள தென் லோனக் ஏரியில் நள்ளிரவு நேரத்தில் 14.7 கனமீட்டர் அளவுள்ள பனிப்பாறைகள் சரிந்து விழுந்தன. இது 20 மீட்டர் உயரமுள்ள அலைகளை உருவாக்கி ஆற்றின் கீழ்நோக்கிய பாதையில் ஓடி பல நீர்மின் நிலையங்கள் குடியிருப்புகளை அழித்தது.

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் கிருஷ்ணா வத்சா கூறுகையில், ‘‘நேபாளத்தில் நிகழ்ந்த சம்பவம் இமயமலை பகுதி பேரிடர் அபாயத்தின் புதிய பரிமாணத்தை விளக்குகிறது. இந்தியாவின் தேசிய பனிப்பாறை உடைப்பு வெள்ள அபாய தணிப்புத் திட்டம், ஆபத்துடைய 195 பனிப்பாறை ஏரிகளை அடையாளம் கண்டுள்ளதுடன், மதிப்பீடு, கண்காணிப்பு, முன்கூட்டிய எச்சரிக்கை, அபாயத் தணிப்பு, சமூக விழிப்புணர்வு ஆகிய 5 முக்கிய முன்னுரிமைகளை பின்பற்றுகிறது. தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இதற்கு முன்னுரிமை அளித்து இதன் வேகத்தையும் செயல்பாட்டு அளவையும் உடனடியாக அதிகரிக்க வேண்டும்’’ என்றார்.

சிக்கிம் பேரிடரைத் தொடர்ந்து, பனி ஏரி உடைப்பால் ஏற்படும் வெள்ள அபாயத்தைக் குறைப்பதற்கான உயர்மட்ட ஒருங்கிணைப்புக் குழுவை ஒன்றிய அரசு அமைத்தது. பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.கே. மிஸ்ரா தலைமையில் அமைக்கப்பட்ட இக்குழு, பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து ஆலோசனை நடத்துதல், பனிப்பாறை ஏரிகள் குறித்து ஆய்வு செய்தல் மற்றும் அதிக ஆபத்துள்ள ஏரிகளைக் கண்டறிதல் ஆகிய பணிகளை மேற்கொண்டது. அதிக ஆபத்துள்ள பனி ஏரிகளைக் கொண்ட 4 இமயமலை மாநிலங்களுக்காக, தேசிய பனிப்பாறை உடைப்பு வெள்ள அபாய தணிப்புத் திட்டம் உருவாக்கப்பட்டு ரூ.150 கோடியை அரசு ஒதுக்கியது.

பேரிடர் அபாயக் குறைப்பு தொடர்பான இந்தக் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் 2024 நவம்பரில் நடைபெற்றது. அப்போது, அக்குழுவின் அணுகுமுறை குறித்து பிரதமரின் முதன்மைச் செயலாளர் திருப்தி தெரிவித்தார். இக்குழு தொடர்ந்து கூட்டங்களை நடத்தி கருத்துகளைப் பெற்றது. பின்னர் மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையிலான கூட்டு உத்தி வடிவமைக்கப்பட்டன. இருப்பினும், இதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் அதிகம் வெளியாகவில்லை. இனியாவது இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு கூடுதல் கவனம் செலுத்த நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.