களை கட்டிய ஓணம் கொண்டாட்டம் : முதல்வர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

கேரளா மற்றும் தமிழகத்தில் உள்ள மலையாள மொழி பேசும் மக்கள், இன்று (ஆகஸ்ட் 26) ஓணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் விஜய் ஓணம் கொண்டாடும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “உலகெங்கும் வாழும் மலையாளச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்!

கேரளம் மாநிலத்தின் அறுவடைத் திருநாளாம் ஓணம் திருநாளில், உங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும், அன்பும், மகிழ்ச்சியும் என்றும் பொங்கிப் பெருகட்டும்! அழகிய வண்ணப் பூக்கோலம்போல் உங்கள் வாழ்க்கை பொலிவு பெறட்டும்!

அன்பைப் பரிமாறி, மகிழ்ச்சியைக் கொண்டாடி, ஒற்றுமையைப் போற்றும் இத்திருநாள் அனைவரது வாழ்விலும் நலத்தையும், வளத்தையும் வழங்கட்டும்!” என தெரிவித்துள்ளார்.

திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “மண்ணும் மக்களும் ஒன்றாக வாழ்ந்த ஒரு காலத்தின் நினைவைப் புதுப்பிப்பதே ஓணம். பிறப்பால் எவரும் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ அல்லர். அனைவருக்குமான சமத்துவமே நம்முடைய இலக்கு.

மகாபலியை தோற்றவராகக் கொண்டாடாமல், மக்களின் மனதில் செழிப்பு மற்றும் மகிழ்ச்சியின் வடிவமாகத் திகழ்ந்த மன்னராகக் கொண்டாடலாம். மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும். அனைவருக்கும் மனமார்ந்த ஓணம் நல்வாழ்த்துகள்!” எனப் பதிவிட்டுள்ளார்.

முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பதிவில், “அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றைப் பின்பற்றி அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கூடி வாழ்ந்திட வேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்தும் ஒணம் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக்கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பதிவல், “நமது மலையாள சொந்தங்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்!

மகாபலி மன்னரின் நல்லாட்சி மற்றும் சமத்துவத்தின் சிறப்பை நினைவுகூரும் இத்திருநாள், ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி, அன்பு, ஆரோக்கியம், அமைதி மற்றும் செல்வச் செழிப்பை பெருக்கட்டும்.

இந்த இனிய ஓணம், அனைவரது வாழ்விலும் புதிய நம்பிக்கைகளையும், நிறைவான வளத்தையும், மனநிறைவையும் கொண்டு வரட்டும். குடும்ப உறவுகள் மேலும் வலுப்பெற்று, இல்லங்கள் புன்னகையாலும் அன்பாலும் மகிழ்ச்சியாலும் என்றும் மலரட்டும்.” என தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பதிவில், “அண்ணல் நபிகள் நாயகம் அவர்களின் பிறந்த நாளை உலகம் முழுவதும் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த மிலாது நபி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பசித்த மக்களுக்கு உணவளிக்க வேண்டும், ஏழை, எளிய மக்களிடம் கருணை காட்ட வேண்டும், எண்ணத்திலும் நடத்தையிலும் தூய்மையாக இருக்க வேண்டும், ஒருவருக்கொருவர் சகோதரர்களாக வாழ வேண்டும் போன்ற இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்கள் வலியுறுத்திய போதனைகளைப் பின்பற்றி வாழ்ந்திட நாம் அனைவரும் உறுதியேற்றிடுவோம்.

அன்பு, அமைதி, மனிதநேயம் மற்றும் சகோதரத்துவத்தை உலகிற்கு போதித்த அண்ணல் நபிகள் நாயகம் அவர்களின் வழியைப் பின்பற்றி, ஒற்றுமையும் நல்லிணக்கமும் நிறைந்த சமுதாயத்தை உருவாக்கிடுவோம் எனக் கூறி, இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மிலாது நபி வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.