கோவை: கோவையில் ரூ.300 கோடி செலவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பெரியார் நூலகம் திறப்பில் இழுபறி நீடிக்கிறது. தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை மற்றும் நூலகத்துறை சார்பில், கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் தந்தை பெரியார் அறிவுலகம் என்னும் பிரம்மாண்ட நூலகம் கட்டுமான பணி கடந்த திமுக ஆட்சியில் துவங்கப்பட்டது. மொத்தம் 6 ஏக்கர் 98 சென்ட் நிலத்தில் 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரை மற்றும் ஏழு தளங்களுடன் இக்கட்டிடம் உருவானது. இதன், தரை தளத்தில் ஆடிட்டோரியம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
முதல் தளத்தில் அறிவியல் மையம், இரண்டாம் தளத்தில் குழந்தைகளுக்கான நூலகம் மற்றும் போட்டி தேர்வுகளுக்கான நூலகம், மூன்றாம் தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம் மற்றும் தலைமை நூலகர் அலுவலகம், 4-ம் தளத்தில் தமிழ் புத்தகப்பிரிவு மற்றும் சொந்த புத்தகம் படிக்கும் பிரிவு, ஐந்தாம் தளத்தில் தமிழ் புத்தகப்பிரிவு மற்றும் இன்குபேஷன் சென்டர், 6-ம் தளத்தில் பருவ இதழ்கள் மற்றும் இன்குபேஷன் சென்டர், 7வது தளத்தில் அறிவியல் மையம், ஆங்கில புத்தகப்பிரிவு மற்றும் டிஜிட்டல் நூலகம் ஆகியவை அமைக்கப்பட்டு வந்தது. தற்போது, இவற்றில் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்து விட்டன.
புத்தகங்கள் மற்றும் இ-புத்தகங்கள் என சுமார் ரூ.50 கோடிக்கும், கணினி, இதர உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.5 கோடிக்கும் என அசத்தலான உள்கட்டமைப்பு வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக சட்டமன்றத்தில், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மீது நேற்று நடந்த மானிய கோரிக்கை விவாதத்தின்போது, திமுக எம்எல்ஏ எ.வ.வேலு, “கோவை பெரியார் நூலகம் கட்டுமான பணிகள் திமுக ஆட்சியில் 95 சதவீதம் முடிவடைந்து விட்டது. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாகூட நேரில் ஆய்வு செய்தார். பெரியார் தங்களின் கொள்கை தலைவர் என தம்பட்டம் அடிக்கும் தவெகவினர், ஏன் பெரியார் பெயரில் கொண்டு வரப்பட்ட நூலக பணிகளை நிறுத்தியுள்ளனர். ஆட்சிக்கு வந்து 3 மாதமாகியும் நூலகம் இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பது ஏன்?’’ என கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விக்கு துறை அமைச்சர் உள்ளிட்ட யாரும் சரியான விளக்கம் அளிக்கவில்லை. இதனால், இந்நூலகம் எப்போது திறக்கப்படும்? என தெரியாத நிலை இருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாடு தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் போட்டித்தேர்வுகள் தற்போது நடந்து வருகின்றனர். அதற்கு தயாராகி வருவதால் பெரியார் அறிவுலகம் கட்டிடத்தை விரைந்து திறக்க வேண்டும் என இளைஞர்கள் மற்றும் போட்டித்தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொதுப்பணி துறை அதிகாரிகள் கூறுகையில்,“கட்டுமான பணிகள் முடிந்துவிட்டது. நூலகத்திற்கு என சுமார் 80 ஆயிரம் புத்தகங்கள் வந்துள்ளது. கட்டிடம் திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் இருக்கிறது. ஆனால், கட்டிடம் திறப்பதற்கான எந்தவித அறிவிப்பும் அரசு சார்பில் தற்போது வரை வரவில்லை. அரசின் அறிவிப்பிற்காக காத்திருக்கிறோம். அடுத்த மாதம் 17ம்தேதி பெரியார் பிறந்த நாளில் இந்நூலகம் திறக்கப்பட வாய்ப்பு இருக்கிறது” என்றனர்.






