ஆலங்குளம் அரசு நெல் குடோனில் மர்ம தீவிபத்து: சேதமடைந்த பகுதிகளை நேரில் ஆய்வு செய்த தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் – பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறிதல், விரிவான விசாரணைக்கு உத்தரவு

ஆலங்குளம், ஜூலை 8:
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஐந்தான் கட்டளையில் இருந்து சொக்கநாதன்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள திறந்தவெளி அரசு நெல் குடோனில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீவிபத்தில் நெல் மூட்டைகள் சேதமடைந்த நிலையில், சம்பவ இடத்தை தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கடந்த சுமார் ஐந்து ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த அரசு நெல் குடோனில் இதுவரை இதுபோன்ற தீவிபத்து ஏற்பட்டதில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும், குடோன் அமைந்துள்ள பகுதியில் மின்சார இணைப்புகள், ஹோட்டல்கள் அல்லது குடியிருப்புகள் இல்லாத சூழ்நிலையில் தீ விபத்து ஏற்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
குடோனில் பணிபுரியும் மேலாளர், ஒப்பந்ததாரர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்தினார். அப்போது, யாருக்கும் தெரியாமல் இத்தகைய தீவிபத்து நிகழ்வது சாத்தியமற்றது என்றும், அரசின் கணக்கு மற்றும் இருப்பு தொடர்பான விவரங்களில் ஏதேனும் முறைகேடுகளை மறைக்கும் நோக்கில் தீவிபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக சிலர் சந்தேகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சம்பவத்தின் உண்மை நிலையை முழுமையாக கண்டறிய உரிய துறை அதிகாரிகள் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆய்வின்போது, நெல் குடோனை சுற்றி பாதுகாப்பு வேலி இல்லாதது, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படாதது, இரவு நேரங்களில் போதுமான மின் விளக்கு வசதி இல்லாதது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு வந்தது. மேலும், இந்த நெல் குடோனுக்காக சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டிருப்பதும் தெரிவிக்கப்பட்டது.


இந்த அனைத்து பாதுகாப்பு குறைபாடுகளையும் விரைவில் சரிசெய்து, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் உறுதியளித்தார்.
இந்த ஆய்வின்போது ஆலங்குளம் டிஎஸ்பி கிளாட்சன் ஜோஸ், ஆலங்குளம் வட்டாட்சியர் பரமசிவன் மற்றும் தவெக தெற்கு மாவட்ட செயலாளர் விபின் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்