குதிரை பேரம்: ஆத்திரப்பட வேண்டிய அதிமுக அமைதிகாப்பது ஏன்? – திருமாவளவன்

குதிரை பேர விவகாரத்தில் அதிமுகவிற்குள் என்ன நடக்கிறது என்பது பற்றி அதிமுக தலைவர்கள் ஏன் வாய் திறக்காமல் இருக்கிறார்கள்? ஆவேசப்பட வேண்டியவர்கள், ஆத்திரப்பட வேண்டியவர்கள், தவெகவிற்கு எதிராகக் கொந்தளிக்க வேண்டியவர்கள் அமைதி காப்பதன் பொருள் என்ன என்று திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “அதிமுகவை முழுமையாகக் கைப்பற்றுவோம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்த கேள்விக்கு, “இதுவரை அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி எந்தவொரு கருத்தும் சொல்லவில்லை. அதிமுகவை முழுமையாகத் தவெகவில் இணைப்போம் என்று அவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது என்றால், ‘இது சரியா, ஜனநாயகமா, அரசியல் அறமா?’ என்ற கேள்வியைத் தவெகவிடமும், அதிமுகவிடமும்தான் ஊடகவியலாளர்கள் கேட்க வேண்டும். அதை விடுத்து, சம்மந்தமே இல்லாமல் தவெகவிலும் இல்லாத, அதிமுகவிலும் இல்லாத எங்களைப் போன்றவர்களிடத்தில் இந்தக் கேள்வியை எழுப்புவது பொருத்தமற்றது. என்றார்.

குதிரை பேரம் நடைபெறுவதாக பாஜக, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநரிடம் புகார் அளித்தது குறித்த கேள்விக்கு, “அது உண்மையாக இருந்தால் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநருக்கு அதிகாரம் இருந்தால் அவர் அதில் உடனடியாக தலையிட வேண்டும்”என்றார்

ஊழல் புகார் குற்றச்சாட்டுகள் இருந்த விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்தது குறித்த கேள்விக்கு, ” அரசியல் களத்தில் இருப்பவன் என்ற முறையில் பதில் சொல்லக் கடமைப்பட்டவனாக இருந்தாலும் கூட, இதை நேரடியாக விஜயபாஸ்கரிடம் கேட்பதுதான் சரி அவர் என்ன காரணத்திற்கான அதிமுகவில் இருந்து வெளியேறினார்?

அதிமுகவிலிருந்து ஆட்களை வெளியேற்ற முயற்சி நடக்கிறது, குதிரை பேரம் நடக்கிறது என்ற விவாதங்கள் ஒருபுறம் இருந்தாலும் கூட, அதிமுகவிற்குள் என்ன நடக்கிறது என்பது பற்றி அதிமுக தலைவர்கள் ஏன் வாய் திறக்காமல் இருக்கிறார்கள்?

ஆவேசப்பட வேண்டியவர்கள், ஆத்திரப்பட வேண்டியவர்கள், தவெகவிற்கு எதிராகக் கொந்தளிக்க வேண்டியவர்கள் அமைதி காப்பதன் பொருள் என்ன? ஆளுநரிடம் சென்று மனு கொடுப்பதை ஒரு கடமையாகச் செய்கிறார்களே தவிர, இதனை ஒரு வெகுமக்கள் கருத்தாக்கமாக மாற்றுவதற்கு அவர்கள் எந்த முயற்சியும் எடுத்ததாகத் தெரியவில்லை. ‘எங்கள் கட்சியைச் சீர்குலைக்கப் பார்க்கிறார்கள், இதை அனுமதிக்க மாட்டோம்’ என்று அங்கிருந்து குரலும் எழவில்லை; ‘பொதுமக்களே இது நியாயமா?’ என்று பொதுமக்களிடத்தில் முறையீடும் செய்யவில்லை.