மதுரையில் பரபரப்பு: சாலை நடுவே பெண் தீக்குளிப்பு – போலீசார் தீவிர விசாரணை
மதுரை, ஜூன் 6:
மதுரை நகரில் சாலை நடுவே பெண் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மதிச்சியம் அருகே உள்ள ராமராயர் மண்டபம் பகுதியில் இன்று மதியம் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சாலையின் நடுவே தீக்குளித்தார். அதிக வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த மதிச்சியம் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தீக்குளித்த பெண் வள்ளி (45) என்பதும், அவர் வீட்டு வேலை செய்து அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும், வறுமை மற்றும் குடும்பச் சிரமங்களால் மன உளைச்சலில் இருந்த வள்ளி, தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், யாரேனும் அவர்மீது தீ வைத்தனரா அல்லது அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா என்பது குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் வள்ளிக்கு சுமார் 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






