குற்றவாளியை சுட்டுப் பிடித்த நெல்லை போலீசார்

குற்றவாளியை சுட்டுப் பிடித்த நெல்லை போலீசார்
ஜூன் – 1
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் பைக்கில் வந்து தொடர் தாக்குதலில் ஈடுபட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த மேலும் ஒரு முக்கிய குற்றவாளியை திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் நெட்டூர் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் என்பவர், வடக்கு அரியநாயகிபுரம் அருகேயுள்ள அரசங்குளம் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில், இந்த வழக்கு சம்பந்தமாக அமைக்கப்பட்ட தனிப்படை காவல்துறையினர் அவரைப் பிடிப்பதற்காக அந்த இடத்திற்குச் சென்றனர்.
அப்போது அய்யப்பனைப் பிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டபோது, அவர் போலீசாரை ஆயுதத்தால் தாக்க முற்பட்டார்.
இதனால் அந்தத் தாக்குதலைத் தடுக்கவும், தற்காப்பு நடவடிக்கையாகவும் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் குற்றவாளி அய்யப்பனுக்கு குண்டு காயம் ஏற்பட்டது.
காயமடைந்த அவர் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக சேரன்மகாதேவி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் V. பிரசண்ண குமார் IPS அவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று நிலைமையைப் பார்வையிட்டார்.
தற்போது குண்டுகாயமடைந்த அய்யப்பன் மற்றும் காயமடைந்த காவலர் ஆகிய இருவருமே மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள அய்யப்பன் ஆலங்குளம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி (History-sheeter) என்றும், இவர் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.