“ஆட்சியை கவிழ்க்க மாட்டோம், ஆனா ‘அதை’ செய்யாதீங்க…”தவெக தலைமைக்கு திருமா அட்வைஸ்!

அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைவதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் இணைவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “இது ஒரு ஆரோக்கியமான அரசியலாக விசிக கருதவில்லை. இந்த ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகவும், குடியரசுத் தலைவர் ஆட்சி இங்கே வந்துவிடக் கூடாது, அதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவும் இடதுசாரி கட்சிகளோடு இணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த முடிவை மேற்கொண்டது.

எங்கள் ஆதரவை நாங்கள் நல்கி இருக்கிறோம். வெளியிலிருந்து ஆதரவு நல்குவது என்கிற அந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அமைச்சரவையிலும் இடம் பெற வேண்டும் என்று தவெக தரப்பில் விடுத்த அழைப்பை ஏற்று, இயக்கத் தோழர்கள் மீண்டும் கலந்தாய்வு செய்து ஏற்கனவே எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று என்னை வலியுறுத்தினார்கள். அதன் அடிப்படையில் நாங்கள் இன்றைக்கு அமைச்சரவையில் இணைந்து இருக்கிறோம். இந்த நிலையில் தவெக தலைவருக்கும், முன்னணி பொறுப்பாளர்களுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி விடுக்கும் வேண்டுகோள்: எந்தச் சூழலிலும் உங்கள் ஆட்சி கவிழ்வதற்கு நாங்கள் இடம் கொடுக்க மாட்டோம். அந்த நம்பிக்கையோடு நீங்கள் ஆட்சியை திறம்படச் செய்ய வேண்டும்.

இந்த விமர்சனங்களுக்கு இடமளிக்கும் வகையில் தவெக தலைமை செயல்படக் கூடாது என்பது எங்கள் விருப்பம். அதிமுக இது போன்ற நெருக்கடிகளைச் சந்திக்கும் என்று தேர்தலுக்கு முன்பே நான் சுட்டிக்காட்டி இருக்கிறேன். பாஜகவோடு கூட்டணி சேர்ந்ததன் விளைவாகத்தான் அதிமுகவின் ஆதரவைப் பெறுவதில் தவெகவுக்கு நெருடல் இருந்ததாகத் தவெக தலைவர்கள் கூறி இருக்கிறார்கள். ஒருவேளை பாஜகவோடு கூட்டணி இல்லாமல் அதிமுக தனித்துத் தேர்தலைச் சந்தித்திருந்தால் அவர்களோடு சேர்ந்து ஆட்சி அமைக்கும் முயற்சியை தவெக முன்னெடுத்திருக்கும். அவ்வாறில்லாமல் காங்கிரஸ் ஆதரவை நாடியதற்கும், இடதுசாரிகளின் ஆதரவை நாடியதற்கும் அதிமுக-பாஜக உறவுதான் காரணம் என்பதைத் தவெக தலைவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆகவேதான் இன்றைக்கு அதிமுகவின் இந்த நெருக்கடி நிலை உருவாகியிருக்கிறது.

இது ஒரு புறம் இருந்தாலும் தவெக தலைமை இது போன்ற நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கக் கூடாது என்பது என்னுடைய வேண்டுகோள். யார் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்தாலும் அவர்களைக் கட்சியில் இணைத்துக்கொள்வது என்பது தவெகவின் மீதான நம்பகத்தன்மையைப் பாதிக்கச் செய்யும். எனவே தவெக தலைமை இதில் கவனமாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.” என தெரிவித்துள்ளார்.