ஆவட்டி கிராமத்தில் தடைப்பட்ட தேர் திருவிழா: நீதிமன்ற ஆணையை அமல்படுத்த கோரிக்கை

நீதிமன்ற உத்தரவுப்படி கோவில் தேர் திருவிழா நடத்த அனுமதி கோரி பொதுமக்கள் மனு
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஆவட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு அய்யனார் ஆலயத்தின் ஆண்டு திருவிழா மே 15 முதல் 22ஆம் தேதி வரை நடைபெறுவதாக ஊர் பொதுமக்கள் சார்பில் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா கடந்த 17ஆம் தேதி ஊரில் உள்ள மூன்று தெருக்களிலும் நடத்த அனுமதி கோரி, ஊர் பொதுமக்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 14ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டு, அதற்கான உத்தரவும் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தேர் திருவிழா எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியான முறையில் நடைபெற காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என இராமநத்தம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் முன்கூட்டியே மனு அளித்திருந்தனர்.
ஆனால், கடந்த 17ஆம் தேதி தேர் திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், காவல்துறையினர் பாதுகாப்பு வழங்காத காரணத்தால் விழா தள்ளிவைக்கப்பட்டதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று (21.05.2026) காலை சுமார் 11 மணியளவில், ஆவட்டி கிராம பொதுமக்கள் திட்டக்குடி வட்டாட்சியர் உதயகுமாரை நேரில் சந்தித்து, நாளை தேர் திருவிழாவை போலீஸ் பாதுகாப்புடன் கிராமத்தின் மூன்று தெருக்களிலும் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆவட்டி கிராம பொதுமக்கள் பல மணி நேரமாக காத்திருந்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.