எஸ்.பி.வேலுமணி பொதுக்குழு கூட்ட தீவிரம் காட்டி வரும் நிலையில் எடப்பாடி தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: முக்கிய முடிவுகள் எடுக்க திட்டமா?

சென்னை: எஸ்.பி.வேலுமணி பொதுக்குழு கூட்ட தீவிரம் காட்டி வரும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்களின் அவசர கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 47 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சிக்குள் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த நிலையில், தவெகவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் அதிமுகவுக்குள் ஒரு பிரிவினர் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி அணியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன்மூலம் எடப்பாடி தலைமையில் ஒரு தரப்பினரும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் தலைமையில் ஒரு தரப்பினரும் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இரு தரப்பினரும் சட்டமன்றத்தில் தங்கள் தரப்பினரை கொறடாவாக நியமிக்க வேண்டி சபாநாயகரிடம் மனு அளித்தனர். தவெக அரசு மீது சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்கள் 25 பேர் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எடப்பாடி தரப்பு ஆதரவு எம்எல்ஏக்கள் 22 பேர் தவெகவுக்கு எதிராக வாக்களித்தனர்.இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்பை சேர்ந்த 25 எம்எல்ஏக்களின் மாவட்ட செயலாளர்களின் பதவிகளை பறித்து, புதிய மாவட்ட செயலாளர்களை எடப்பாடி பழனிசாமி நியமித்தார். மேலும் சி.வி.சண்முகத்துக்கு ஆதரவாக இருந்த 3 மாவட்ட செயலாளர் பதவியை எடப்பாடி பறித்தார். இந்த 28 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர். இதையடுத்து எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் அதிமுக பொதுக்குழுவை கூட்டி, எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக 5ல் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்களின் கையெழுத்தை பெற்று, பொதுக்குழுவை கூட்ட முயற்சித்து வருகின்றனர். அதேநேரம், எடப்பாடியும், அதிமுக கட்சி கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி உத்தரவை மீறி தவெகவுக்கு வாக்களித்த 25 எம்எல்ஏக்களின் பதவியை பறிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடவும் திட்டமிட்டுள்ளார். மேலும், வேலுமணி தரப்பினர் பொதுக்குழுவை கூட்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதை முறியடிக்கவும் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளார்.

இதுபற்றி ஆலோசனை நடத்த அதிமுக மாவட்ட செயலாளர்களின் அவசர கூட்டத்திற்கு எடப்பாடி அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி இல்லத்தில், இன்று காலை 9 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது. உட்கட்சி பூசல் முற்றிய நிலையில், இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.