கிருஷ்ணகிரி அருகே 2 வாலிபர்கள் எரித்துக்கொலை: கரிக்கட்டையாக உடல்கள் மீட்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 2 வாலிபர்கள் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரிக்கட்டையாக கிடந்த உடல்களை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டை செல்லும் சாலையில், ஆலப்பட்டி ஊராட்சி வெப்பாலம்பட்டி சாலை ஓரத்தில், சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார். அதே சாலையில், சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில், கொடுகூர் என்ற இடத்தில் அதே பாணியில் சாலையோரம் சுமார் 35 வயதுடைய வாலிபர் உடலும், பெட்ஷீட்டால் சுற்றி, தென்னை ஓலைகளை மேலே போட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் இருந்தது. நேற்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், தாலுகா போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இந்த கொலைகள் குறித்து தகவல் அறிந்த சேலம் சரக போலீஸ் டிஐஜி சந்தோஷ் ஹடிமணி, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி தங்கதுரை ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும், போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கொலை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதையடுத்து, 2 சடலங்களையும் போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்ட 2 பேரும் யார் என்று தெரியவில்லை. அவர்களின் உடல்கள் 70 முதல் 80 சதவீதம் வரையில் எரிந்த நிலையில் கரிக்கட்டையாக கிடந்தது. வேறு எங்காவது அவர்களை கொலை செய்து, 2 உடல்களையும் காரில் இங்கு கொண்டு வந்து வீசி தீ வைத்து எரித்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் தர்மபுரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் காணாமல் போனவர்கள் பற்றிய பட்டியலை, போலீசார் சேகரித்து வருகின்றனர்.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் உள்ள ஆந்திர, கர்நாடக மாநில போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், யாரேனும் சமீபத்தில் காணாமல் போய் உள்ளார்களா? எதற்காக இந்த கொலை நடந்தது? என்பது குறித்து, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையோரத்தில் 2 வாலிபர்கள் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.