சென்னை: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் பள்ளிகளில் படித்த பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் நேற்று வெளியிட்டது. இதில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 694 மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல், மாணவர்களை விட மாணவியரே 3.81 சதவீதம் அதிக தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர். மாநில பாடத்திட்டத்தின் கீழ் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இயங்கும் பள்ளிகளில் பிளஸ் 2 படித்த மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 2ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடந்தது. அததை தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி, அம்மாத இறுதி வரை நடந்தது. மே 8ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும், என்று தேர்வுத்துறை அறிவித்து இருந்தது. அதன்படி நேற்று தேர்வு முடிவுகளை வெளியிட்டது. பிளஸ் 2 தேர்வு முடிவுகளை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது: பிளஸ் 2 தேர்வில் தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 7 லட்சத்து 91 ஆயிரத்து 654 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அவர்களில் 4 லட்சத்து 18 ஆயிரத்து 724 பேர் மாணவியர். 3 லட்சத்து 72 ஆயிரத்து 930 பேர் மாணவர்கள். தேர்வில் மொத்தம் 7 லட்சத்து 53 ஆயிரத்து 694 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 95.20 சதவீதம்.
இவர்களில் 4 லட்சத்து 6 ஆயிரத்து 167 பேர் மாணவியர். அவர்களின் தேர்ச்சி வீதம் 97 சதவீதம். மாணவர் 3 லட்சத்து 47 ஆயிரத்து 527 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி வீதம் 93.19 சதவீதம். மாணவர்களை விட மாணவியர் 3.81 சதவீதம் அதிக தேர்ச்சி பெற்று சாதித்துள்ளனர். இந்த தேர்வில் 7 ஆயிரத்து 874 பேர் பங்கேற்கவில்லை. பிளஸ் 2 தேர்வில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 0.17 சதவீதம் தேர்ச்சி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்த மேனிலைப் பள்ளிகள் 7536 உள்ளன. இவற்றில் 2639 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. 5170 பள்ளிகள் 95 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளன. அரசுப் பள்ளிகளில் 489 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. 1572 அரசுப் பள்ளிகள் 95 சதவீத தேர்ச்சியை ெபற்றுள்ளன. அதேபோல், ஆண்கள் மேனிலைப் பள்ளிகளை விட பெண்கள் மேனிலைப்பள்ளிகள் 6.59 சதவீதம் கூடுதலாகவும், இருபாலாரும் படிக்கும் பள்ளிகள் 4.81 சதவீதம் கூடுலாக தேர்ச்சி பெற்றுள்ளன. பிளஸ் 2 தேர்வில் ஒரு பாடத்தில் மட்டும் 100 மதிப்பெண்கள் பெற்றவர்கள் 16024 பேர். அரசுப் பள்ளகளில் படித்தவர்களில் ஒரு பாடத்தில் மட்டும் 100 மதிப்பெண்கள் பெற்றவர்கள் 1695 பேர். பிளஸ் 2 தேர்வில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் 8855 பேர் பங்கேற்றனர். அவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் 6811 பேர். தேர்ச்சி வீதம் 76.92 சதவீதம்.
சிறைவாசிகள் 250 தேர்வு எழுதி, 238 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்ச்சி வீதம் 95.20சதவீதம். பிளஸ் 2 தேர்வில் இந்த ஆண்டு 25 ஆயிரத்து 521 பேர் தனித் தேர்வர்களாக எழுதினர். அவர்களில் 6171 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதேபோல், பிளஸ் 1 தேர்வில் கடந்த ஆண்டில் தேர்ச்சி பெறாமல் அரியர் எழுதியோர் 20444. அவர்களில் 8491 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதை அடுத்து, தற்காலிக மதிப்பெண் பட்டியல்கள் மே 13ம் தேதி முதல் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல்கள் பெற விரும்புவோர் மே 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை (பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 அரியர்) விண்ணப்பிக்க வேண்டும். பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவ, மாணவியருக்கான துணைத் தேர்வுகள் ஜூன் 29ம் தேதி முதல் ஜூலை 7ம் தேதி வரையில் நடத்தப்படும். பிளஸ் 1 அரியர் வைத்துள்ளவர்களுக்கு ஜூலை 8ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடக்கும். இந்த துணைத் தேர்வு எழுத விரும்புவோர் மே 18ம் தேதி முதல் ஜூன் 2ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டல் செய்ய விரும்புவோர் ஜூன் 5ம் தேதி முதல் 8ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் ெதரிவித்தார்.






