திருநெல்வேலி, ஏப். — மாநகரப் பகுதியில் சேகரிக்கப்படும் செப்டிக் டேங்க் (நச்சுத் தொட்டி) கழிவுகளை பொது இடங்களில் கொட்டும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருநெல்வேலி மாநகராட்சி சுகாதாரத்துறை சார்பில், மாநகரில் இயங்கி வரும் 23 பதிவு பெற்ற செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகன உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் டாக்டர் மோனிகா ரானா இ.ஆ.ப. அவர்களின் உத்தரவுப்படி நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாநகர நல அலுவலர் டாக்டர் என். பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார்.அப்போது அவர் கூறியதாவது:
நச்சுத் தொட்டி கழிவு மேலாண்மை விதிகள் 2022ன் கீழ், செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் வாகனங்கள் அனைத்தும் மாநகராட்சியில் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும்.
மேலும் பதிவு புதுப்பிப்பு நடவடிக்கைகளும் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் போது சேகரிக்கப்படும் கழிவுகள் அனைத்தும் இராமையன்பட்டியில் அமைந்துள்ள பாதாள சாக்கடை கழிவுகள் மேலாண்மை மையத்தில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் செலுத்தி மட்டுமே கொட்டப்பட வேண்டும். இதனை மீறி பதிவு பெறாமல் வாகனங்கள் இயக்கப்பட்டாலோ அல்லது பொது இடங்களில் கழிவுகள் கொட்டப்பட்டாலோ, சம்பந்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாநகராட்சி மண்டல சுகாதார அலுவலர்கள் பாலச்சந்தர், சாகுல் ஹமீது, முருகன் உள்ளிட்டோர் மற்றும் பல சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.






