தமிழ்ப் பேரறிஞர் கா.சு.பிள்ளை 81வது நினைவேந்தல்: நெல்லையில் அஞ்சலி

திருநெல்வேலி, ஏப்.— நெல்லை மாவட்ட தமிழ் அமைப்புகளின் சார்பில், தமிழ்ப் பேரறிஞர் கா.சுப்பிரமணிய பிள்ளையின் 81வது நினைவேந்தல் நிகழ்ச்சி நெல்லை மாநகராட்சி வளாகம் முன்பாக அமைந்துள்ள அவரது நடுகல்லில் மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தி நடைபெற்றது.

மூத்த தமிழறிஞர் உ.வே.சாமிநாதையர் அவர்களின் மாணவராகவும், சென்னை சட்டக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவராகவும், திராவிட இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன் ஆகியோருக்கு ஆசிரியராக விளங்கியவருமான கா.சு.பிள்ளை, 60க்கும் மேற்பட்ட சட்ட நூல்களை இயற்றி தமிழ் மற்றும் சட்டத் துறையில் பெரும் பங்களிப்பு செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சி முன்னாள் மண்டல சேர்மன் வெங்கட சுப்பிரமணியன், மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத் துணைத் தலைவர் கவிஞர் கோ. கணபதி சுப்பிரமணியன், தமிழ் நலக்கழக நெல்லை மாவட்டச் செயலாளர் கவிஞர் பாப்பாக்குடி இரா. செல்வமணி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. சிவப்பிரகாசர் நற்பணி மன்ற துணைச் செயலாளர் கவிஞர் முத்துசாமி வரவேற்புரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சோமசுந்தரம், தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மைய செயற்குழு உறுப்பினர் கவிஞர் புன்னைச் செழியன், கவியரசு கண்ணதாசன் இலக்கிய மன்ற தலைவர் முனைவர் திருக்குறள் இரா. முருகன், முன்னாள் துணை ஆட்சியர் தியாகராஜன், முன்னாள் நூலக கண்காணிப்பாளர் சங்கரன், நிழல் இலக்கிய தளம் கவிஞர் செ.ச. பிரபு, மருத்துவக் கல்லூரி மாணிக்கவாசகம், பாரதியார் உலகப் பொதுச் சேவை நிதி செய்தித் தொடர்பாளர் கவிஞர் ஆறுமுகம், சமூக ஆர்வலர் குரு உலகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்விற்கான ஏற்பாடுகளை கா.சு.பிள்ளை அவர்களின் பெயரன் மீ. சுப்பிரமணியன் மற்றும் பூட்டன் பழனிசங்கர் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்