விடிஞ்சா 2026 தேர்தல்.. ஓட்டு போட போறீங்களா? இந்த தப்பு மட்டும் செஞ்சிடாதீங்க.. அப்புறம் ஜெயில்தான்

சென்னை: ஏப்ரல் 23 தேர்தல் நெருங்கும் நிலையில், வாக்குச்சாவடியில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய விதிமுறைகள் குறித்து தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்கள் மீண்டும் கவனம் பெறுகின்றன. அந்தவகையில், வாக்குச்சாவடிக்குச் செல்லும் ஒவ்வொரு குடிமகனும் அவசியம் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் மற்றும் தவிர்க்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

இந்தியாவில் தேர்தல் நாள் என்பது ஜனநாயகத்தின் முக்கியமான திருநாள் போன்றதாகக் கருதப்படுகிறது.. ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்களிக்கும் உரிமை அரசியலமைப்பால் வழங்கப்பட்ட ஒரு முக்கிய உரிமையாகும்..

வாக்குச்சாவடிக்கு செல்லும் முன்பும் அங்கு இருப்பதற்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன.. இது தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெற வேண்டும் என்பதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது.. வாக்குப்பதிவு அன்று, வாக்காளர்கள் தங்களது உரிமையைச் சரியாகப் பயன்படுத்த சில அடிப்படை விதிகளைத் தெரிந்துகொள்வது அவசியம்.

விடிஞ்சா 2026 தேர்தல்

வாக்குப்பதிவு நாளில் அரசியல் கட்சி சின்னங்களை காட்டும் உடைகள் அல்லது பிரச்சாரப் பொருட்களை அணிந்து செல்லக்கூடாது.. இது தேர்தல் நடுநிலையை பாதிக்கக்கூடும் என்பதால் கடுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.. வாக்குச் சாவடி அருகே பிரச்சாரம் செய்வதும், வாக்காளர்களை கவர முயற்சிப்பதும் சட்ட விரோதமாகும்.. அதேபோல் பணம் அல்லது பரிசு வழங்கி வாக்குகளை மாற்ற முயற்சிப்பதும் குற்றமாகும்..

வாக்குச்சாவடிக்குள் நுழையும்போது அலைபேசி கொண்டு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே, வெளியிலேயே போன்களை வைத்துவிட்டுச் செல்வது அல்லது சுவிட்ச்-ஆஃப் செய்வது நல்லது. வாக்குப்பதிவு மையத்தின் 100 மீட்டர் சுற்றளவிற்குள் எந்தவிதமான அரசியல் பிரச்சாரங்களோ அல்லது கட்சி சின்னங்கள் பொறித்த ஆடைகளையோ அணிந்து செல்லக் கூடாது. இது தேர்தல் விதிமீறலாகக் கருதப்படும்.

வாக்காளர்கள் – அடையாள அட்டை

வாக்காளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வாக்காளர் தகவல் சீட்டை (VIS) மட்டும் வைத்துக்கொண்டு வாக்களிக்க முடியாது; அதனுடன் சேர்த்து தேர்தல் ஆணையம் அங்கீகரித்த 12 வகையான அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்வது கட்டாயமாகும். குறிப்பாக, வரிசையில் நிற்கும்போது முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதால், அவர்களைத் தடையின்றி வாக்களிக்க அனுமதிப்பது ஒரு பொறுப்புள்ள குடிமகனின் கடமையாகும்.

வாக்காளர் தங்கள் விருப்பப்படி எந்தவொரு அரசியல் கட்சியையும் தேர்வு செய்ய முழு சுதந்திரம் பெற்றிருக்கிறார்கள்.. யாராலும் வாக்கை கட்டாயப்படுத்த முடியாது.. வாக்களித்த பின் அதைப் பற்றி வெளிப்படையாக பேச வேண்டிய அவசியமும் இல்லை.. வாக்கு ரகசியமாக பாதுகாக்கப்படும் என்பது தேர்தல் அமைப்பின் முக்கியக் கொள்கையாகும்..