கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் நாச்சியார்பேட்டை, பாளையங்கோட்டை, சோழத்தரம், குமாரகுடி பகுதிகளில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பிரசாரத்தில் நேற்று ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுகவால் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தது. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற திமுக ஆட்சியை தொடர வேண்டும். அதிமுக, பாஜ கூட்டணி வலுப்பெற்றால் தமிழகத்தில் ஆபத்து ஏற்படும். அதிமுக, பாஜ கூட்டணி வெற்றி பெற்றால் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடைபெறுவது போன்று மசூதிகள் இடிப்பு, கிறிஸ்தவ தேவாலயங்கள் இடிப்பு, குடியிருப்புகளை கொளுத்துவது போன்ற வன்முறை நடைபெறும். அதிமுக ஆட்சியில் காவிரி டெல்டா பகுதியாக ஸ்ரீமுஷ்ணம் இருந்ததை அதிலிருந்து நீக்கியது அதிமுக. இதற்காக ஸ்ரீமுஷ்ணத்தில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் நான் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தேன். தற்போது 13 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திமுக ஆட்சியில் இப்பகுதி காவிரி டெல்டாவாக அறிவிக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
அதிமுக-பாஜ கூட்டணி வென்றால் மசூதி,சர்ச்சுகள் இடிக்கப்படும் குடியிருப்புகள் கொளுத்தப்படும்: திருமாவளவன் பரபரப்பு பேச்சு






