அதிமுக ஆட்சிக்கு வந்தால் எச்.ராஜா (அ) அண்ணாமலை ஆறே மாதத்தில் முதல்வர்: வார்னிங் கொடுக்கும் திருமாவளவன்

விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி, மயிலம், வானூர் உள்ளிட்ட தொகுதிகளில் விசிக தலைவர் திருமாவளவன் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் பாஜவை தோளில் சுமந்துவரும் பழனிசாமியை அதிமுக தொண்டர்கள் நம்பி ஏமாந்து விடாதீர்கள். தமிழகத்தில் பாஜ ஆட்சி வேரூன்ற பழனிசாமி துணை போகிறார். தமிழகத்தில் தப்பித் தவறி அதிமுக ஆட்சிக்கு வந்தால் பழனிசாமி முதல்வராக நீடிக்க முடியாது. பாஜ எச்.ராஜாதான் முதல்வராக வருவார். இரட்டை இலைக்கு வாக்களித்தால் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் வாக்களித்ததாகிவிடும். இரட்டை இலை இவர்களிடம் அடமானம் வைக்கப்பட்டுள்ளது. இரட்டை இலையில் ஒருவர் வெற்றி பெறுகிறார் என்றால், பாஜ வளர்வதற்கு அல்லது ஆட்சி அமைப்பதற்கு வழி வகுத்துவிடும்.

திமுக கூட்டணி நமக்கு 2 எம்பி தொகுதிகளை தந்து, நமது வெற்றிக்கு அவர்களும் பாடுபட்டதால்தான் நமக்கு அங்கீகாரம் கிடைத்தது. பாஜவுடன் சேர்ந்துவரும் ஒவ்வொரு கட்சிக்கும் நாம் பாடம் புகட்டியாக வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வந்தால் 6 மாதத்தில் ஆட்டத்தை கலைத்து ஆடி, எச்.ராஜா அல்லது அண்ணாமலையை முதல்வராக்கி விடக்கூடும். 100 தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்று விட்டாலே தமிழக அரசியலை தலைகீழாக பாஜ புரட்டி போட்டுவிடும். அதிமுகவை வீழ்த்தப்போவது பாஜதான் என்பதை அக்கட்சி தொண்டர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஸ்டாலின் மீண்டும் முதல்வராக மதச்சார்பற்ற அணிகளுக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

போலீஸ் தடியடி: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளிமேடுபேட்டை கிராமத்தில் கூட்டுசாலை சந்திப்பில் பேருந்து நிலையம் அருகே மயிலம் தொகுதி தேமுதிக வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று முன்தினம் இரவு தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தை முடித்து கொண்டு அடுத்த பகுதிக்கு சென்றவுடன் அப்பகுதியில் கூடியிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இருதரப்பாக பிரிந்து சாலையின் நடுவே ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு மயிலம் தொகுதி விசிக மாவட்ட செயலாளர் பாபுசோழன் முன்னிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய செயலாளர் ஒருவரை மாற்றியது தொடர்பாக இரு தரப்பினர் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ள முற்பட்டபோது அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அங்கிருந்து சிறிது தூரம் சென்ற அவர்கள் மீண்டும் வாகனங்களில் இருந்து இறங்கி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் லேசாக தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.

திருமாவளவன், விசிக வேட்பாளர் மீது வழக்கு;

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பேருந்து நிலையத்தில் நேற்றுமுன்தினம் பண்ருட்டி தொகுதி விசிக வேட்பாளர் அப்துர் ரகுமானை ஆதரித்து விசிக தலைவர் திருமாவளவன் பானை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது இரவு 10.20க்கு வேட்பாளர் அப்துர் ரகுமானை ஆதரித்து சில முஸ்லிம்கள் பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டு முழக்கங்கள் எழுப்பினர். இது தேர்தல் விதி முறைகளுக்கு முரணானது எனக்கூறி பண்ருட்டி தாசில்தார், உதவி தேர்தல் அலுவலர் பலராமன் ஆகியோர் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் விசிக தலைவர் திருமாவளவன், வேட்பாளர் அப்துர் ரகுமான் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.