‘இந்தா புடிங்க 25 ரூபா’ சிறுவர்களை ஓட்டு கேட்க வைத்த மாஜி அமைச்சர்: 2 மணிநேரம் வெயிலில் தவித்ததால் பெற்றோர் கொதிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும் மாஜி அமைச்சருமான கே.சி.வீரமணி நேற்று ஒட்டப்பட்டி கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் பள்ளி சிறுவர்களையும் பணம் கொடுப்பதாக அழைத்து அதிமுக கட்சி கொடியை கொடுத்து நிற்க வைத்தனர்.

காலை 10 மணிக்கு மாஜி அமைச்சர் கே.சி.வீரமணி வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், சிறுவர்கள் அப்போது முதலே வெயிலில் நிற்க வைக்கப்பட்டனர். இதில் பல சிறுவர்கள் சிறிது நேரத்தில் சென்றுவிடலாம் என்று நினைத்து காலில் செருப்பு கூட இல்லாமல் வந்துவிட்டனர். ஆனால் மதியம் 12 மணிக்கு வந்து வாக்கு சேகரித்த வேட்பாளர் கே.சி.வீரமணி சிறிது நேரம் பேசினார்.

அவர் சென்ற பிறகு பள்ளி சிறுவர்களை 4 பேர் அடங்கிய குழுக்களாக பிரித்த கே.சி.வீரமணியின் ஆதரவாளர்கள், ஒவ்வொரு குழுவுக்கும் தலா ரூ.100 கொடுத்துள்ளனர். இதுகுறித்து கேட்டபோது இதுதான் கொடுப்போம் ‘இந்தா புடிங்க, ஆளுக்கு 25 ரூபா எடுத்துக்கோங்க’ என கூறிவிட்டு சென்றுள்ளனர். பள்ளி சிறுவர்களை வைத்து வாக்கு சேகரிப்பதே தவறு. இதில் 2 மணிநேரம் வெயிலில் பிள்ளைகளை தவிக்க வைத்துவிட்டு 25 ரூபாய் கொடுத்தார்களா? என அவர்களது பெற்றோர் கொதித்து போய் உள்ளனர்.