கன்னியாகுமரியில் தேர்தல் பிரசாரத்துக்கு சென்றுவிட்டு ஹைவேசில் சைக்கிள் ரேஸ் ஓட்டிய விஜய்: பின்னாடியே தலைதெறிக்க ஓடிய பாதுகாவலர்கள், போலீசார்: ரசிகர்கள் வந்ததால் பாதியில் எஸ்கேப்

தவெக தலைவர் விஜய் குமரி மாவட்டத்தில் பிரசாரம் செய்ய நேற்று மதியம் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தனி விமானத்தில் வந்தார். தூத்துக்குடியில் இருந்து புறப்பட்ட அவரது வாகனத்துக்கு பின் ரசிகர்கள் பின்தொடர்ந்து விபத்து ஏற்படுவதை தடுக்க விஜய்யின் வாகனத்துக்கு முன்னும், பின்னும் போலீஸ் வாகனங்கள் அணிவகுத்து சென்றன. இதனால் விஜய் வாகனம் விரைவாக சென்றது. இருப்பினும், விஜய் வாகனத்தை ஆங்காங்கே பின்தொடர்ந்து அட்டகாசம் செய்த ரசிகர்களின் வாகனங்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.

முக்கிய சந்திப்புகளில் தனது வாகனத்தை நிறுத்தி தொண்டர்களுடன் விஜய் கை குலுக்கினார். இதனால் விஜய் வாகனத்தின் முன் தொண்டர்கள் பாய்ந்தனர். தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி வரையிலான ஒட்டுமொத்த பயணத்தையுமே ஒரு ரோடு ஷோவாக மாற்றி, காவல்துறையினரின் கட்டுப்பாடுகளை விஜய் உடைத்தெறிந்தார். விஜய் வாகனம் மெதுவாக வந்ததால், போலீசாரும் பெரும் சிரமம் அடைந்தனர். தொண்டர் ஒருவர் வைத்திருந்த கட்சிக்கொடியை வாங்கி கையில் ஏந்தியபடி, வாகனத்தின் மேலிருந்து போஸ் கொடுத்தார்.

மதியம் 12:45 மணிக்கு தூத்துக்குடியில் புறப்பட்ட விஜய், 3 மணி நேரம் கழித்து, மாலை 3:45 மணிக்குத்தான் கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானாவை வந்தடைந்தார். வழக்கமாக ஒன்றே கால் மணி நேரத்திற்கும் குறைவான பயண நேரமே எடுக்கும் இந்தத் தொலைவை, விஜய் ஒரு ரோடு ஷோவாகவே மாற்றி சுமார் 3 மணி நேரமாகக் கடந்து வந்தார். விஜய்யின் வாகனத்துக்கு முன்னும் பின்னும் போலீசார் வந்ததால், பின்தொடர முடியாத ரசிகர்கள் தேசிய நெடுஞ்சாலையின் எதிர்திசையிலும் வாகனத்தை ஓட்டி இடையூறு செய்தனர்.

இதனால் தூத்துக்குடி – திருநெல்வேலி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கன்னியாகுமரி ரவுண்டானா வந்தடைந்ததும், விஜய் திடீரென வேனில் இருந்து இறங்கி சைக்கிள் ஓட்டினார். கன்னியாகுமரி ஜீரோ பாயின்ட் செல்லும் வழியில் விசில் அடித்துக்கொண்டே விஜய் சைக்கிளில் ரேஸ் ஓட்டினார். இதனால், அவரது பாதுகாவலர்கள், போலீசார் தலை தெறிக்க பின்னால் ஓடி வந்தனர். விஜய் சைக்கிள் ஓட்டுவதைப் பார்த்து உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரை நோக்கி ஓடி வந்தனர்.

ஆனால், தன்னை நோக்கி மக்கள் வருவதைக் கண்டதும் முகம் சுளித்த விஜய், பதற்றமடைந்து பாதியிலேயே சைக்கிளைப் போட்டுவிட்டு சொகுசு பிரசார வாகனத்திற்குள் தஞ்சம் புகுந்தார். தொடர்ந்து, பிரசார வாகனத்தில் ஏறி சுமார் 20 நிமிடங்கள் விஜய் பேசினார். விஜய் தாமதமாக வந்ததாலும், வெயில் கடுமையாக வாட்டி வதைத்ததாலும் 7 பேர் மயக்கம் அடைந்தனர். விஜய் ரோடு ஷோ மகாதானபுரம் ரவுண்டானாவில் இருந்து குமரி ஜீரோ பாயின்ட் வரை சுமார் 3 கி.மீட்டர் தூரம் நடந்தது.

கன்னியாகுமரி மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பில் 147 அடி உயர கொடி கம்பம் உள்ளது. இந்த கொடி கம்பத்தை சுற்றி உள்ள மின் விளக்குகளில் தொண்டர்கள் ஏறி விடாதபடி இரும்பு தகரம் வைத்திருந்தனர். மேலும் இந்த பகுதியில் உள்ள மின் கம்பங்களிலும் தகரம் வைத்து கட்டி இருந்தனர். ஜெனரேட்டர் வைக்கப்பட்டு இருந்த இடத்தை சுற்றியும் தகரம் வைக்கப்பட்டு இருந்தது. விஜய்யை பார்க்க ஆர்வத்தில் போலீசார் வைத்திருந்த பேரிகார்டுகளிலும் தொண்டர்கள் ஏறி நின்றனர். அங்கிருந்த கோயில் மண்டபம் மீது ஏறி அட்டகாசம் செய்தனர்.

* ஜெப மாலையுடன் பிரசாரம்

பிரசாரத்தின் போது வழங்கப்பட்ட ஜெபமாலையை மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி கழுத்தில் அணிந்துகொண்ட விஜய், அதை ரோடு ஷோ முடியும் வரை வெளியில் தெரிவது போல் அணிந்து இருந்தார். வேட்பாளர் ஒருவர் அவருக்கு மேரி மாதா சிலை வழங்கினார். அதை ஏந்தியபடி வாக்கு சேகரித்தார். குமரியில் கிறிஸ்வதவர்களின் வாக்குகள் அதிகம் இருப்பதால், அதை கவர்வதற்காக விஜய் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.

* ‘முருகன் குன்றம்’ மக்கள் புறக்கணிப்பு

ஒரு பக்கம் மதச்சார்பின்மை பேசும் விஜய், மறுபக்கம் கன்னியாகுமரி முருகன் குன்றம் வாசல் அருகே அவரை காண திரண்டிருந்த மக்களைக் கண்டுகொள்ளாமல் சென்றது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேரி மாதா சிலையையும், ஜெபமாலையையும் வாங்கிய விஜய், முருகன் குன்றம் பகுதியில் நின்றிருந்த மக்களின் உணர்வுகளை மதிக்கத் தவறியது ஏன்? என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

* 6 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தம்

விஜய் வருகைக்காக பகல் 12 மணியில் இருந்து நாகர்கோவில் – கன்னியாகுமரி போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்பவர்களும், கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் செல்பவர்களும் பெரும் சிரமத்ம் அடைந்தனர். பகல் 12 மணிக்கு நிறுத்தப்பட்ட போக்குவரத்து, மாலை 6 மணிக்கு பின் மீண்டும் ெதாடங்கியது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், சுற்றுலா பயணிகள் பெருமளவில் கன்னியாகுமரி வந்திருந்தனர். இவர்கள் பெரும் சிரமத்தை சந்தித்தனர்.

* வேட்பாளர்களின் பெயர் தெரியாத விஜய்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விஜய்க்கு நினைவு பரிசு வழங்கினர். அவர்களிடம் பெயர்களை விஜய் கேட்டு தெரிந்து கொண்டார். ரோடு ஷோ தொடங்குவதற்கு முன் பேசிய விஜய், வேட்பாளர்கள் யார் பெயரையும் குறிப்பிடவில்லை. நாட்டு படகு மாதிரி, திருவள்ளுவர் சிலை, மாதா சொரூபம், வில் அம்பு உள்ளிட்டவற்றை அவருக்கு நினைவு பரிசாக வழங்கினர்.

* காரைக்குடி மக்களுக்கு குமரியில் வருத்தம்

காரைக்குடியில் கடந்த 10ம் தேதி பிரசாரத்துக்கு சென்ற விஜய், திட்டமிட்டு தாமதமாக வந்ததால் பேசாமல் சென்றுவிட்டார். நேற்று கன்னியாகுமரியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய விஜய், ‘என் நெஞ்சில் குடியிருக்கும் காரைக்குடி மக்களே… அன்றைக்கு வந்து பேசாமல் போயிடுச்சி….’ என வருத்தம் தெரிவித்தார்.