சேரன்மகாதேவி ரயில் நிலையத்தில் ஒழுங்கற்ற வாகன நிறுத்தம் – ரயில்வே போலீசார் கண்காணிப்பு கோரி பயணிகள் கோரிக்கை
சேரன்மகாதேவி, மார்ச் 29:
நெல்லை–செங்கோட்டை ரயில் வழித்தடத்தில் முக்கிய நிலையமாக விளங்கும் சேரன்மகாதேவி ரயில் நிலையத்தில், எச்சரிக்கை பலகைகளை மீறி ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தப்படுவது குறித்து ரயில்வே போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லைக்கு அடுத்தபடியாக அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் அதிக அளவில் உள்ளதால், சேரன்மகாதேவி ரயில் நிலையம் தினமும் நூற்றுக் கணக்கான பயணிகள் வருகை தரும் முக்கிய மையமாக உள்ளது.

பணிநிமித்தமாக ரயிலில் பயணிக்கும் பலர் தங்களது இருசக்கர வாகனங்களை நிலைய வாசல், மரத்தடிகள் போன்ற இடங்களில் ஒழுங்கின்றி நிறுத்தி செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக, கடந்த சில வாரங்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் திருட்டு போனதாக போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து, பயணிகள் நலனை கருத்தில் கொண்டு கடந்த மாதம் ரயில் நிலையத்தில் புதிய வாகன காப்பகம் தொடங்கப்பட்டது.
இருப்பினும், பலர் அந்த வசதியை பயன்படுத்தாமல், எச்சரிக்கை பலகைகளைப் பொருட்படுத்தாமல் நிலைய வளாகத்திலேயே வாகனங்களை நிறுத்தி செல்வது தொடர்கிறது. சிலர் எச்சரிக்கை பலகை முன்பே வாகனங்களை நிறுத்துவது கூட காணப்படுகிறது.
இந்த நிலை தொடர்ந்தால் மீண்டும் வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பயணிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவே, ரயில்வே போலீசார் நிரந்தரமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்றும், ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்த இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்தும் வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.






