மதுரையில் 100% வாக்களிப்பு விழிப்புணர்வு பேரணி தொடக்கம்
மதுரை, மார்ச் 27:
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல்-2026 நடைபெற உள்ளதை முன்னிட்டு, மக்களிடையே வாக்களிப்பு விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் மதுரை மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, “100% வாக்களிப்போம் – என் வாக்கு என் உரிமை” என்ற கோஷத்துடன் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.
மதுரை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான கே.ஜே. பிரவீன் குமார் இ.ஆ.ப., அவர்கள் மதுரை ராஜா முத்தையா மன்றம் அருகில் இருந்து பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த பேரணியில் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மற்றும் சாக்ஸ் எம்.ஏ.வி.எம்.எம் பொறியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் உற்சாகமாக கலந்து கொண்டு, வாக்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் பதாகைகள் ஏந்தி நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.
“என் வாக்கு என் உரிமை”, “100% வாக்களிப்போம்” போன்ற முழக்கங்களை எழுப்பிய மாணவர்கள், பொதுமக்களிடம் தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தனர்.
இந்த நிகழ்வின் மூலம், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஜனநாயக கடமை குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கும் என மாவட்ட நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.






