அஞ்சுகிராம் சோதனைச் சாவடியில் வாகன தணிக்கை: தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாவட்ட எல்லையான அஞ்சுகிராம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள காவல் சோதனைச் சாவடி மையத்தில் நடைபெற்று வரும் வாகன சோதனை பணிகளை தேர்தல் பொது பார்வையாளர் திருமதி அனுபா ஸ்ரீவஷ்தலா, இ.ஆ.ப., அவர்கள் 23.03.2026 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் மாவட்ட எல்லைகளில் கடுமையான வாகன சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அஞ்சுகிராம் சோதனைச் சாவடியில் போலீசார் மற்றும் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இணைந்து 24 மணி நேரமும் தீவிரமாக வாகன தணிக்கை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆய்வின்போது, சோதனைச் சாவடியில் பணியாற்றும் அதிகாரிகளின் வருகைப் பதிவேடு, சோதனை நடைமுறை, வாகனங்கள் பரிசோதனை செய்யும் விதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை தேர்தல் பொது பார்வையாளர் விரிவாக பரிசோதித்தார். மேலும், தேர்தல் தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை, மதுபானம் மற்றும் பொருட்கள் கடத்தல் போன்றவற்றை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளுக்கு தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார். தேர்தல் காலத்தில் எந்தவித குறையும் இல்லாமல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த ஆய்வு நடவடிக்கை, தேர்தல் செயல்முறை சீருடனும் வெளிப்படையாகவும் நடைபெறுவதை உறுதிசெய்யும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.