குழந்தை பிறந்த 10 நாட்களில் தாய் உயிரிழப்பு – வீரவநல்லூர் அருகே சோகம்
வீரவநல்லூர், மார்ச் 19:
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே குழந்தை பிறந்த 10 நாட்களிலேயே இளம் தாய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீரவநல்லூர் தம்பிரான் காலனி பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டியின் மகள் மகாலட்சுமி (19). இவருக்கும், மாறாதையை அடுத்த சீதபற்பநல்லூர் புதூரைச் சேர்ந்த கொடிமுத்து என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு கடந்த மார்ச் 9ஆம் தேதி நெல்லை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
பிரசவத்திற்குப் பின்னர் மகாலட்சுமி தாய் வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ரத்த அழுத்தம் அதிகரித்ததால், உறவினர்கள் உடனடியாக அவரை சேரன்மகாதேவி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மகாலட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வீரவநல்லூர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று, மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை பிறந்த 10 நாட்களிலேயே தாய் உயிரிழந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை பிறந்த 10 நாட்களில் தாய் உயிரிழப்பு – வீரவநல்லூர் அருகே சோகம்






