தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் கடந்த மார்ச் 10ஆம் தேதி இயற்கை உபாதைக்காக காட்டுப்பகுதிக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. இதுதொடர்பாக விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று மாணவியின் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்தசூழலில் மாணவியின் உடல் மட்டும் அவரது உறவினர்களாலே மீட்கப்பட்டது.
இந்த சம்பவம் தென் தமிழகத்தையே உலுக்கியிருக்கும் நிலையில், அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று (மார்ச் 16) நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதி ராமன் அமர்வில் விசரணைக்கு வந்தது.
இதையடுத்து நீதிபதிகள், “இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினர்.
மேலும், “மாணவியின் பெற்றோர்கள் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். . வாக்குமூலத்தை வீடியோ, ஆடியோவாக பதிவு செய்ய வேண்டும். அறிவியல் முறையில் விசாரணையை மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பான நிலை அறிக்கையை ஏப்ரல் 2ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தனர்.
மாணவியின் பெற்றோர் அளித்த புகார் மீது போலீசார் அலட்சியம் காட்டிருக்க கூடாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.






