100 ஆண்டுகள் நிறைவு: பிரான்சேரி துவக்கப்பள்ளியில் உற்சாகமான நூற்றாண்டு விழா

திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பிரான்சேரி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியின் நூறாவது ஆண்டு விழா நேற்று (14.03.2026) பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு பிரான்சேரி முப்பிடாதி அம்மன் திருக்கோவில் முன்பாக செண்டை மேளம், பட்டாசு முழக்கம் மற்றும் மாணவர்களின் சிலம்பாட்ட நிகழ்ச்சியுடன் நூற்றாண்டு தீபச்சுடர் பள்ளிக்குக் கொண்டு வரப்பட்டு ஏற்றப்பட்டது. மேலும் பள்ளியின் நூற்றாண்டு நினைவாக மரக்கன்றும் நடப்பட்டது.

பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், குறிப்பாக நடன நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை கவர்ந்தன. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி ஜே. சோபியா எபன் (M.A., M.Ed.) வரவேற்புரை நிகழ்த்தினார்.

விழாவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னாள் மாணவி டாக்டர் மீனாட்சி சுப்பையா (B.S.M.S.) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு புத்தகப் பை, பேனா, பென்சில் மற்றும் வாட்டர் பாட்டில் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கினார்.

மேலும் முன்னாள் மாணவர் எஸ். சிவா மலேசியாவில் இருந்து இந்த விழாவில் கலந்துகொள்ள வருகை தந்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அவர் பள்ளியின் பழைய நினைவுகளை நினைவுகூர்ந்து ஆசிரியர்களைப் பற்றி கவிதை வாசித்ததும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை பெரிதும் கவர்ந்தது.

நிகழ்ச்சியை இடைநிலை ஆசிரியர் ரா. அமுதா (M.A., B.Ed.) தொகுத்து வழங்கினார். விழாவிற்கு உதவியளித்த முன்னாள் மாணவர்கள், நண்பர்கள் மற்றும் பொருளாதார உதவி செய்த அனைவருக்கும் முன்னாள் மாணவர் எஸ். சிவா நன்றியுரை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் குழுவாகநினைவுப்புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.                                           இறுதியாக தேசிய கீதத்துடன் விழா நிறைவுற்றது.