திருப்புடைமருதூர் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் சாக்கு இல்லாமல் நெல் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலை

திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூர் கிராமத்தில் நெல் அறுவடை இரண்டு வாரங்களுக்கு முன்பே முடிந்துள்ளது. ஆனால் அரசு நெல் கொள்முதல் நிலையம் தாமதமாக செயல்படத் தொடங்கியதால், விவசாயிகள் தங்கள் வீடுகளில் நெல் மூட்டைகளை வைத்துக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் நெல் மூட்டைகளை அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றபோது, அங்கு பணிபுரியும் அதிகாரிகள் “ஒரு மையத்திற்கு தேவையான அளவு சாக்குகள் இல்லை; சாக்குகள் வந்த பிறகே நெல் வாங்க முடியும்” என்று தெரிவித்து விவசாயிகளை திருப்பி அனுப்புகின்றனர்.
மேலும், கொள்முதல் நிலையத்தின் மேலதிகாரிகளிடம் விவசாயிகள் கேட்டபோது, “அரசு கொள்முதல் நிலையத்தில் ஏற்கனவே போதுமான அளவு

நெல் இருப்பு உள்ளதால் வைக்க இடம் இல்லை. அதனால் குறைவான அளவில் மட்டுமே நெல் கொள்முதல் செய்ய முடியும். தற்போது தேர்தல் காலம் என்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது” என்று கூறப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
இதனால் நெல் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர். அரசு உடனடியாக இந்த பிரச்சினையை கவனத்தில் கொண்டு,

திருப்புடைமருதூர் அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்கு தேவையான சாக்குகளை வழங்கி, விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை விரைவாக கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு திருப்புடைமருதூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் விவசாயி ப. முத்து ஐயப்பன் தெரிவித்துள்ளார்.