முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ஓபிஎஸ்: மகன் ரவீந்திரநாத், ஐயப்பன் எம்எல்ஏவும் சேர்ந்தனர்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று திமுகவில் இணைந்தார். அவருடன் உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன், ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர். திமுகவில் இணைந்துள்ள ஓபிஎஸ்சுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் 2 வாரத்தில் வர வாய்ப்புள்ளது.

தேர்தலுக்கு இன்னும் குறுகிய காலமே உள்ளதால் அரசியல் களமும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுக, அதிமுக, நாதக, விஜய்யின் தவெக என இந்த முறை 4 முனைப்போட்டி நிலவுகிறது. தற்போது அனைத்து கட்சிகளும் கூட்டணியை இறுதி செய்வது, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பணிகளில் வேகம் காட்டி வருகின்றன. இந்த தேர்தலை பொறுத்தவரை திமுக மெகா கூட்டணி அமைத்துள்ளது. கடந்த முறை கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதே கட்சிகள் மீண்டும் இடம்பெற்றுள்ளன. மக்களவை தேர்தலில் இருந்து மநீமவும் திமுக கூட்டணியில் பயணிக்கிறது.

இந்நிலையில் கடந்த 19ம் தேதி அதிரடியாக திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது. இப்படி அரசியல் களம் ஒருபக்கம் பம்பரமாக சுழன்று கொண்டிருக்க முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் எந்த கூட்டணியில் சேர போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. சட்டசபை கூட்டத் தொடரின் கடைசி நாளில், ஆளும் திமுக அரசு சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது என ஓ.பன்னீர்செல்வம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சட்டசபை கூட்டத் தொடர் முடிந்ததும் ஓபிஎஸ் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பு உச்சத்துக்கே சென்றது. இதன் மூலம் ஓபிஎஸ் திமுகவில் இணைவது என்பது கிட்டத்தட்ட உறுதியானது. இந்நிலையில், ஓபிஎஸ் நேற்று காலை சென்னை அண்ணா அறிவாலயம் வந்தார். அவரை வாசலில் வரவேற்று அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பி.கே.சேகர்பாபு ஆகியோர் கையை பிடித்து உள்ளே அழைத்து சென்றனர். தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் அவரை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு வரவேற்றனர்.

தொடர்ந்து திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்தார். அப்போது ஓபிஎஸ்சை கைக்குலுக்கியும், கட்டி அணைத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். தொடர்ந்து ஓபிஎஸ்சுக்கு, மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணிவித்தும் வாழ்த்து தெரிவித்தார். பதிலுக்கு ஓபிஎஸ் மு.க.ஸ்டாலினுக்கு பூங்கொத்து, சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஓ.பன்னீர்செல்வம் திமுகவின் உறுப்பினர் படிவத்தை நிரப்பி கொடுத்தார்.

அவருக்கு திமுக நிர்வாகிகள் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். ஓபிஎஸ்சுடன் அவரது மகனும் முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத், உசிலம்பட்டி தொகுதி எம்எல்ஏ பி.ஐயப்பன் மற்றும் முன்னாள் எம்பி மதுரை இரா.கோபாலகிருஷ்ணன், புதுவை மாநில அமைப்பாளர் ஓம்சக்தி சேகர், அம்மா பேரவை முன்னாள் துணைச் செயலாளர் டி.ரமேஷ், மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் வழக்கறிஞர் சி.திருமாறன்- இணைச் செயலாளர் வழக்கறிஞர் பி.ராஜலட்சுமி, மாவட்டச் செயலாளர்கள் சென்னை ரெட்சன் சி.அம்பிகாபதி, திருப்பூர் மடத்துக்குளம் கே.மாரிமுத்து, நாமக்கல் பழனிசாமி, மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் ரீத்தா பழனிசாமி, புதுக்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் ராஜசேகர் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.

அப்போது இளைஞர் அணிச் செயலாளர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைச்சர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பி.கே.சேகர்பாபு, தங்கம் தென்னரசு, தேனி வடக்கு மாவட்டச் செயலாளர் தங்க.தமிழ்செல்வன் எம்.பி., போடி லட்சுமணன் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக தி.நகரில் இருந்து ஓ.பன்னீர்செல்வமும் அமைச்சர் சேகர்பாபுவும் ஒரே காரில் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுகவில் இணைந்துள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளது. மேலும் அவர் மீண்டும் போடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து தலைமை செயலகம் சென்று ஓ.பன்னீர்செல்வம் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவருடன் அவரது உசிலம்பட்டி ஐயப்பனும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின் அதிமுகவில் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே ஒற்றைத் தலைமைப் பிரச்னை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் சட்ட ரீதியாகவும் பின்னடைவை சந்தித்தார். இதையடுத்து கடந்த 2024 மக்களவை தேர்தலில் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து போட்டியிட்டார். தொடர்ந்து ஓபிஎஸ் அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழுவைத் தொடங்கினாலும், அதிமுகவில் மீண்டும் இணைய தயார் என்று வெளிப்படையாகவே தெரிவித்து வந்தார்.

ஆனால் ஓபிஎஸ்சை மீண்டும் அதிமுகவில் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று இபிஎஸ் தெரிவித்துவிட்டார்.  அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மற்றொருவரான டிடிவி.தினகரனின் அமமுகவை தே.ஜ. கூட்டணியில் இணைக்க இபிஎஸ் ஒப்புக் கொண்டாலும், ஓபிஎஸ்சை சேர்க்க இபிஎஸ் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். டிடிவி.தினகரன் அந்த கூட்டணியில் ஐக்கியமானார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தனித்துவிடப்பட்டார். அவரது ஆதரவாளர்களாக இருந்த எம்எல்ஏக்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தனர்.

அதேபோல், ஜேசிடி பிரபாகர், கு.ப.கிருஷ்ணன் போன்றோர் விஜய்யின் தவெகவிலும், மாநிலங்களவை உறுப்பினரான தர்மர் மீண்டும் அதிமுகவிற்கே சென்றுவிட்டனர். ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பன் ஆகியோர் மட்டும் என்ன முடிவு எடுப்பது என்ற குழப்பத்தில் இருந்தனர். அண்மையில் சட்டசபை கூட்டத்தொடரின்போது, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார் ஓபிஎஸ். மீண்டும் திமுகதான் ஆட்சி அமைக்கும் என ஐயப்பன் சட்டசபையிலேயே பேசி இருந்தார்.

இந்நிலையில் தான் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவின் இணைந்தது குறித்து அவர் நிருபர்களிடம் அவர் பேசியதாவது:

அரசு நலத்திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற தாயுள்ளத்தோடு முதல்வர் என்ற பொறுப்பில் ஐந்தாண்டு காலம் சிறப்பான ஆட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். தமிழகத்தில் உள்ள அனைத்து தாய்மார்கள், பெண்கள் மீண்டும் முதல்வராக மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

சட்டமன்ற தேர்தலில் முதல்வர் செய்த ஐந்தாண்டுகள் சாதனைகளால் திமுகவின் நிச்சயம் வெற்றி பெறும். மீண்டும் தளபதி தமிழகத்தில் முதல்வராக வருவார். பொதுவாக மக்களின் மனநிலை புரிந்து கொண்டு அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை அறிவிப்பது வழக்கம். ஆனால் ஆளும் கட்சி மக்களுக்கு அன்றாட வாழ்க்கைக்கான திட்டங்களை அர்ப்பணித்த ஆட்சி முதல்வரின் ஆட்சி. எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் அறிவிப்புகள் எந்த திட்டத்தையும் குறிப்பிடும் அளவிற்கு செல்லும் அளவிற்கு இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

* 3 முறை முதல்வர் ; 5 முறை எம்.எல்.ஏ

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும் இருந்தவர். முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்த போது நிதி அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்தார். அதிமுகவின் பொருளாளராகவும் இருந்தார்.

ஜெயலலிதா முதல்வராக நீடிக்க முடியாத சூழல்களில் 2001, 2014-ல் அவருக்கு பதிலாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக சிறிது காலம் பதவி வகித்தார். 2016-ல் ஜெயலலிதா மறைந்த போதும் சில மாதங்கள் முதல்வராக இருந்தார் ஓ.பன்னீர்செல்வம். மேலும், 2001 மற்றும் 2006ல் பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ.,வாகவும், 2011, 2016, 2021 தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் இருந்தும் அதிமுக சார்பில் எம்.எல்.ஏ ஆனார்.