அம்பாசமுத்திரம் தொகுதியில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாட்டின் 225வது சட்டமன்றத் தொகுதியான அம்பாசமுத்திரம் தொகுதிக்குட்பட்ட சேரன்மகாதேவி பகுதியில் இன்று வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சேரன்மகாதேவி சார்ஆட்சியர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலரின் தலைமையில், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினரும் இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை முன்னெடுத்தனர். சேரன்மகாதேவி சார்ஆட்சியர் அலுவலகத்திலிருந்து சுமார் 20 ஆட்டோக்களுடன் பேரணி தொடங்கப்பட்டது. ஆட்டோக்களில் வாக்காளர் விழிப்புணர்வு தொடர்பான விளம்பர ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) கொண்ட விழிப்புணர்வு வாகனத்தை சப் கலெக்டர் ஆய்ஷ் குப்தா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த வாகனம் சேரன்மகாதேவி பேரூராட்சி பகுதிக்குட்பட்ட பெரியார் மேல்நிலைப்பள்ளி, ஆர்.சி. நடுநிலைப்பள்ளி மற்றும் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள சுமார் 12 வாக்குச்சாவடி மையங்களைச் சென்றடைந்து, 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

இந்நிகழ்ச்சியில் அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் திரு.வைகுண்டம் , சேரன்மகாதேவி வட்டாட்சியர் திரு. நவாஸ், தேர்தல் துணை வட்டாட்சியர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களின் பங்கேற்பை அதிகரிக்கும் நோக்கில் இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.






