தென் தமிழ்நாட்டையே.. அடியோடு மாற்ற போகும் மிக முக்கிய அறிவிப்பு.. நெல்லை, தூத்துக்குடிக்கு ஜாக்பாட்

சென்னை: நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளை 16, 8 மற்றும் 4 வழிச் சாலைகளாக மேம்படுத்தும் மத்திய அரசின் திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களை இணைக்கும் மிக முக்கியமான புதிய சாலைத் திட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. NH-32 தேசிய நெடுஞ்சாலையின் கீழ், தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் கன்னியாகுமரியை இணைக்கும் புதிய நான்கு வழிச்சாலைக்கான உத்தேச வழித்தட வரைபடத்தை அரசு வெளியிட்டுள்ளது.

தென் தமிழகத்தின் போக்குவரத்து புரட்சி

சென்னையில் இருந்து தூத்துக்குடி வரையிலான சுமார் 690 கி.மீ. தூரத்திற்கான NH-32 நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் ஏற்கனவே பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, இந்தச் சாலை தற்போது தூத்துக்குடியில் இருந்து தெற்கே நீட்டிக்கப்படுகிறது. ஆன்மீக நகரமான திருச்செந்தூர் வழியாக கன்னியாகுமரியைச் சென்றடையும் இந்தச் சாலை, ‘தூத்துக்குடி-திருச்செந்தூர்-கன்னியாகுமரி (TTK) சாலைத் திட்டம்’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த புதிய நான்கு வழிச்சாலை சுமார் 106.9 கி.மீ. நீளம் கொண்டதாக அமையவுள்ளது. இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் 25 கிராமங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் 11 கிராமங்கள் என மொத்தம் 853.09 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. கடலோரப் பாதையும் கடந்து செல்லும் கிராமங்களும் இந்தத் திட்டம் புதுக்கோட்டை அருகே உள்ள முடிவைத்தானேந்தல் கிராமத்தில் தொடங்கி, முக்கிய ஊர்கள் வழியாகச் செல்கிறது: தூத்துக்குடி மாவட்டம்: காட்டலங்குளம், நட்டாத்தி, சிறுத்தொண்டநல்லூர், ஆறுமுகமங்கலம், கொட்டாரக்குறிச்சி, வாழவல்லான், சுகந்தலை, சேதுக்குவாய்த்தான், அங்கமங்கலம், நல்லூர், ஆறுமுகநேரி, அம்மன்புரம், மூலக்கரை, நாத்தகுளம், கண்டசாமிபுரம், மேலத் திருச்செந்தூர், கீழத் திருச்செந்தூர், குலசேகரப்பட்டினம், உடன்குடி, அடியாகுறிச்சி, பள்ளக்குறிச்சி, படுக்கப்பத்து மற்றும் திருப்பணி புத்தன்தருவை.

திருநெல்வேலி & கன்னியாகுமரி: திருநெல்வேலி மாவட்ட எல்லையில் குட்டம், உவரி, கரைச்சுத்து புதூர், கூடங்குளம், இருக்கன்துறை 1 & 2 மற்றும் லெவின்ஜிபுரம் வழியாகச் சென்று, அஞ்சுகிராமத்திற்கு முன்பாக கருங்குளம் அருகே தற்போதுள்ள திருநெல்வேலி-கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையுடன் இணைகிறது.