தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி நீடிக்க வேண்டுமென இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

* 8,000 மஹல்லா ஜமாத்துக்கள் திமுக ஆட்சி தொடர ஆதரவு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயற்குழு கூட்டம் சென்னை ராயபுரத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் 8 ஆயிரம் மஹல்லா ஜமாத்துக்கள் உள்ளன. அவர்கள் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நல்ல முறையில் உள்ளது. அதுதொடர வேண்டும் என்று தீர்மானித்துள்ளனர். அதன்படி 2026 சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த ஆண், பெண்கள் அனைவரும் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்குதான் ஒட்டுமொத்தமாக வாக்குகள் அளிப்பார்கள்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் மூன்று தொகுதி கொடுத்தார்கள். பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியை வழங்கினார்கள். நல்ல ஒத்துழைப்புடன் கே.நவாஸ்கனி வெற்றி பெற்றார். தமிழகத்தில் 40 லட்சம் முஸ்லிம் வாக்குகள் உள்ளன. வரும் 22ம் தேதி பேச்சுவார்த்தை கமிட்டி அறிவிக்கப்படும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. அந்த கமிட்டியில் யார் யார் இடம்பெறுகிறார்கள் என்று பார்ப்போம். எங்களை அழைத்தவுடன் சென்று பேசுவோம்.

தமிழகத்தில் அண்ணா காலம் முதல் கலைஞர், மு.க.ஸ்டாலின் இன்று வரை திமுக ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிகாரத்தில் பங்கு என்பது எங்களது கோரிக்கை அல்ல. திமுக ஆட்சியில் அனைத்திலும் எங்களுக்கு பங்கு கொடுக்கிறது. பங்கு கொடுக்காமல் எங்களை ஒதுக்கவில்லை.

காங்கிரஸ் கட்சியில் ஒரு சிலர் ஆட்சியில் பங்கு என்று கூறுகிறார்கள். இதை தேசிய தலைமை ஏற்றுக் கொண்டதா? என்று தெரியவில்லை. பல்வேறு கருத்துகள் கூறுவார்கள். கருத்து பறிமாற்றம் தான். கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை. விஜய் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார். இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை. தேர்தலில் நின்ற பிறகு பார்க்கலாம். மக்கள் தான் எஜமானர்கள். நாங்கள் போட்டியிடும் 20 தொகுதிகளை தேர்வு செய்து வைத்துள்ளோம். அதில் 5 தொகுதி கேட்போம், எங்கள் கட்சியின் சின்னமான ஏணி சின்னத்தில் தான் போட்டியிடுவாம். இவ்வாறு அவர் கூறினார்.