கூட்டணியில கட்சிகளை சேர்க்க நாங்க குழு அமைக்கலங்க…எடப்பாடியின் சொந்த ஊரில் அலறிய நயினார்

பாஜ மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், வருகின்ற சட்டமன்ற தேர்தல்-2026ஐ சிறப்பாக எதிர்கொண்டு, மகத்தான வெற்றியினை பெற்றிடும் வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் பல அமைப்புகள் இணைய விருப்பம் தெரிவித்துள்ளன. அமைப்பு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வலு சேர்த்திட பாரதிய ஜனதா சார்பில் மாநில குழு அமைக்கப்படுகிறது. அந்த குழுவின் தலைவராக பாஜ மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி, துணை தலைவராக மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.பாலச்சந்திரன் நியமிக்கப்படுகிறார்கள் எனக்கூறப்பட்டிருந்தது.

கூட்டணிக்கு அதிமுக தலைமை வகிக்கும் நிலையில், என்டிஏ கூட்டணியில் மேலும் பல அமைப்புகளை சேர்க்க பாஜ குழு அமைத்தது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக தலைமை சில கருத்துகளை பாஜ தலைமைக்கு தெரிவித்துள்ளது. இதனிடையே, நேற்று காலை எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலத்திற்கு வந்த பாஜ மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், மாரத்தான் போட்டியை துவக்கி வைத்தார். பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தே.ஜ. கூட்டணியின் மதுரை பொதுக்கூட்டம், வரும் 28ம் தேதி நடைபெற இருந்த நிலையில், மார்ச் 1ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு, என்டிஏ கூட்டணிக்கு புதிய கட்சிகள் வரும். என்டிஏ கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்க்கவும், பேச்சுவார்த்தை நடத்தவும் இதுவரை பாஜ சார்பில் தனியாக குழு அமைக்கவில்லை. சந்தர்ப்பம் வரும் போது, எந்தெந்த தொகுதியில் யார் போட்டியிடுவார்கள், யாருக்கு ஒதுக்கப்படும் என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த 2 நாட்களுக்கு முன், என்டிஏ கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்க்க வி.பி.துரைசாமி தலைமையில் குழு அமைப்பதாக நயினார் நாகேந்திரன் அறிவித்திருந்தார். தற்போது, அவர் அதிமுகவில் இருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில், திடீரென பல்டி அடித்து, அப்படி குழு ஏதும் அமைக்கவில்லை எனக்கூறியுள்ளார். அதுவும் எடப்பாடி பழனிசாமியின் சொந்த ஊரான சேலத்தில் வைத்து தெரிவித்து, அதிர்ச்சியளித்துள்ளார். இந்த கூட்டணி பேச்சுவார்த்தை குழு விவகாரம், என்டிஏ கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.