அம்பாசமுத்திரம், ஜன.29 :
அம்பாசமுத்திரம் ரயில் பயணிகள் நலச்சங்கத்தின் சார்பில் இன்று (ஜனவரி 29) தென்னக ரயில்வே மதுரை கோட்ட அலுவலகத்தை நேரில் சென்ற சங்க நிர்வாகிகள், மதுரை கோட்ட பிரிவு செயல்பாட்டு மேலாளர் (DOM) திரு சுரேஷ் ரெட்டி IRTS அவர்களை சந்தித்து பயணிகள் நலனுக்கான முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர்.
இந்த சந்திப்பில் சங்கத்தின் தலைவர் சரவணன் சக்திவேல், துணைச் செயலாளர் ஆண்டனி ஜெனோ, நிர்வாகிகள் ஆறுமுகநயினார் மற்றும் பேராசிரியர் வேலாயுதம் ஆகியோர் உடனிருந்தனர்.
அந்த மனுவில்,
தினசரி இயக்கப்படும் செங்கோட்டை – நெல்லை (56774) மற்றும் நெல்லை – செங்கோட்டை (56775) ரயில்களில் நிலவும் கடும் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் தற்போது 12 ஆக உள்ள பெட்டிகளை 18 பெட்டிகளாக உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், கொல்லம் – புனலூர் MEMU ரயில்கள் (66317, 66318) திருநெல்வேலி வரை நீட்டிக்கப்பட வேண்டும் அல்லது ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த நெல்லை – கொல்லம் பேசஞ்சர் ரயிலை ஒரு நாளைக்கு இரு வேளை (காலை, மாலை) இயக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
செங்கோட்டை – தாம்பரம் வாரம் மூன்று முறை இயக்கப்படும் அதிவிரைவு ரயிலை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும் என்றும், செங்கோட்டையில் இருந்து அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, விழுப்புரம் மார்க்கமாக தாம்பரம் செல்லும் வாராந்திர விரைவு ரயிலை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
நெல்லை – அம்பாசமுத்திரம் மார்க்கத்தில் பயணிகள் அதிகம் பயன்படுத்தி வந்த 56743 ரயில், பழைய நேரமான பிற்பகல் 1.40க்கு பதிலாக தற்போது 2.40க்கு புறப்படுவதால், தென்காசி – மதுரை 16328 தினசரி விரைவு ரயிலுக்கான இணைப்பு இல்லாமல் போயுள்ளதாகவும், இதனால் பயணிகள் எண்ணிக்கை கடுமையாக குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டி, 56743 ரயிலை பிற்பகல் 2 மணிக்கு புறப்படுமாறு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்த பிரிவு செயல்பாட்டு மேலாளர் திரு சுரேஷ் ரெட்டி, உரிய அதிகாரிகளிடம் நடைமுறை சாத்தியக் கூறுகளை உடனடியாக ஆய்வு செய்து அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
மேலும், செங்கோட்டை – ஈரோடு ரயிலில் ஜனவரி 27 முதல் 10 பெட்டிகள் இயக்கப்பட்டு வருவதாகவும், நேற்று முதல் கூடுதலாக இரண்டு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அம்பாசமுத்திரம், மன்னார்கோவில் மற்றும் கீழாம்பூர் பகுதிகளில் உள்ள ரயில்வே கேட்கள் தினசரி 16 முறைக்கும் மேல், 30 நிமிடங்களுக்கு அதிகமாக மூடப்படுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அனைத்து ரயில்வே கிராசிங்குகளிலும் இன்டர்லாக்கிங் முறையிலான அமைப்புகள் கொண்டுவரப்பட்டு வருவதால் விரைவில் இந்த பிரச்சினை தீர்க்கப்படும் என அதிகாரி உறுதி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து சங்க நிர்வாகிகள், இணை கூடுதல் வணிக பிரிவு மேலாளர் திரு மணிவண்ணன் அவர்களை சந்தித்து, கூடுதல் முன்பதிவு கவுண்ட்டர் அலுவலர்கள் நியமிக்கவும், தானியங்கி டிக்கெட் விநியோக இயந்திரங்கள் மற்றும் தேவையான உபகரணங்கள் வழங்கவும் கோரிக்கை வைத்தனர்.
இந்த சந்திப்பு பயணிகள் நலனுக்கான முக்கிய முன்னேற்றமாக அமைந்துள்ளது என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அம்பாசமுத்திரம் ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் மதுரை கோட்ட மேலாளரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு






