சுடுகாடு வழிப்பாதை திறக்கப்படாவிட்டால் 2026 தேர்தல் புறக்கணிப்பு – ஆதிதிராவிடர் பொதுமக்கள் அறிவிப்பு

சேரன்மகாதேவி :
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி வட்டம், கோபாலசமுத்திரம் பேரூராட்சி மன்றத்திற்கு உட்பட்ட பிரான்சேரி கிராமம், வார்டு எண் 11 மற்றும் 12 பகுதிகளில் வசித்து வரும் ஆதிதிராவிடர் சமுதாய மக்களுக்கு சொந்தமான இடுகாடு மற்றும் சுடுகாட்டிற்கு செல்லும் முக்கிய வழிப்பாதை கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அடைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

 

மேலும், ஆதிதிராவிடர் சமுதாயத்தினர் மூன்று தலைமுறைகளாக வழிபட்டு வரும் காலங்கரை சுடலை மாடன் சுவாமி மற்றும் இசக்கி அம்மன் திருக்கோயில்கள் அமைந்துள் இடத்திற்குச் செல்லும் ஒரே வழிப்பாதையும் தற்போது மூடப்பட்டு இருப்பதால், பொதுமக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இவ்வழிப்பாதை கடந்த காலத்தில் கோபாலசமுத்திரம் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் திரு. என். கணேசன் அவர்களால் சுடுகாடு மற்றும் கோயில்களுக்கு செல்லும் பொதுப்பாதையாகக் கருதி தார்ச்சாலை அமைக்கப்பட்டதாகவும், அதன் பின்னரே தனியார் நபர் ஒருவர் இந்த வழிப்பாதை தனக்கு சொந்தமான பட்டா நிலம் எனக் கூறி பாதையை அடைத்துள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்த சுடுகாடு மற்றும் கோயில் வழிப்பாதையை திறக்கக் கோரி மாவட்ட ஆட்சித் தலைவர், சேரன்மகாதேவி வட்டம் தனி வட்டாட்சியர், ஆதிதிராவிட நலத்துறை

அலுவலர்கள் மற்றும் கோபாலசமுத்திரம் பேரூராட்சி மன்றம் ஆகியோரிடம் பலமுறை மனுக்கள் அளித்த போதிலும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்த வழிப்பாதையை ஆதிதிராவிடர் பொதுமக்கள் மட்டுமன்றி, அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்த பொதுமக்களும் சுடுகாட்டிற்கு செல்ல பயன்படுத்தி வந்ததாகவும், தற்போது பாதை அடைக்கப்பட்டதால் இறுதி சடங்குகள் நடத்துவதில் கடும் சிரமம் ஏற்பட்டு வருவதாகவும் கூறினர்.

எனவே, உடனடியாக சுடுகாடு மற்றும் கோயில்களுக்கு செல்லும் வழிப்பாதையை திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இக்கோரிக்கைக்கு தீர்வு காணப்படாத பட்சத்தில் 2026 நடைபெறவுள்ள தேர்தலை புறக்கணிக்க உள்ளதாகவும் ஆதிதிராவிடர் பொதுமக்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.