மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பகுதியில் பொங்கல் தொகுப்பு டோக்கன் வழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் நூறுக்கும் மேற்பட்டோர் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு

நெல்லை மாவட்டம் அம்பை மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த 95 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் கடந்த ஆண்டு மூடப்பட்டது. ஆனாலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் பலர் அங்கேயே வசிக்கின்றனர். அரசு சார்பில் அனைவரையும் கீழே இறக்குவதற்கான முயற்சி நடந்து வருகிறது. இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இதற்கிடையில் மாஞ்சோலையில் தங்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாக தொழிலாளர்கள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு பிறகு சமீபத்தில் ஈடுபட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு போன்ற தேயிலைத் தோட்ட பகுதிகளை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட நபர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன.
மாஞ்சோலையில் அவர்கள் வசிக்கவில்லை என்ற காரணத்தை கூறி அங்கு அவர்களுக்கு ஓட்டு உரிமை மறுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் அடிப்படை வசதிகளுக்காக தான் அடிக்கடி கீழே சென்று வருவதாகவும் தங்களுக்கு மாஞ்சோலையில் தான் முகவரி இருப்பதாகவும் மக்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இது போன்ற சூழலில் தற்போது தமிழக அரசு வழங்கி வரும் பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் இதுவரை மாஞ்சோலை பகுதியில் வழங்காததால் இன்று தொழிலாளர்கள் 100 க்கும் மேற்பட்டோர் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் அவர்கள், ஏற்கனவே மூன்று மாதங்களாக ரேஷன் பொருட்கள் வழங்காததால் பசி பட்டினியாக இருக்கிறோம். தற்போது அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பு டோக்கன் இதுவரை எங்களுக்கு கிடைக்கவில்லை. எனவே எங்களுக்கு மாஞ்சோலையிலேயே ரேஷன் பொருள் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அதே சமயம் கீழே வைத்து தான் பொங்கல் தொகுப்பு வழங்க முடியும் என அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி வருகின்றனர்.






