மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வேக்கு கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளார்கள். அதுபோல மற்ற துறைக்கும் நிதி ஒதுக்கி இருப்பார்கள் என அன்புமணி ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.
கோவை : அண்மையில் நாடாளுமன்றத்தில் நடப்பாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது . இதில், பாஜக கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களான பீகார் மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டில், தமிழ்நாடு, கேரளா, டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கூடுதல் நிதி, சிறப்பு திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது எதிர்க்கட்சிகள் மத்தியில் விமர்சனங்களை பெற்றது.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் இல்லை என இன்று திமுக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதே போல மற்ற கட்சிகளும் அடுத்தடுத்து ஆர்ப்பாட்டங்களை அறிவித்துள்ளன. இந்நிலையில், மத்திய பட்ஜெட் குறித்து இன்று கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பட்ஜெட்டில் போதிய நிதி தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.






