சென்னை: நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் வெளியான லப்பர் பந்து என்ற திரைப்படம் ஓடிடி தளத்தில் எப்போது ரிலீஸாகிறது என்ற தேதி வெளியாகியுள்ளது. ஹரீஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடிப்பில் அண்மையில் லப்பர் பந்து வெளியானது. திரையரங்கில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்த இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்ற கேள்வி ரசிகர்களை துரத்திக்கொண்டே இருந்தது.

ஒவ்வொரு வாரமும் ஓடிடி தளத்தில் புதிய படங்கள் வெளியாகி வருகின்றன. கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு ஓடிடி எனும் தளம் சூடுபிடித்துள்ளது. தியேட்டருக்கு குடும்பமாக சென்று படங்களை பார்க்க முடியாவிட்டால் ஓடிடி தளத்தில் புதிய படங்களை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இந்த படத்திற்கு பாராட்டுகள் குவிந்துள்ளன. இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கிரிக்கெட்டை மையமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது. குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் வரும் அக்டோபர் மாதம் 18-ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.
வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பார்வையாளர்கள் மத்தியில் கொண்டாடப்படும் இந்த படத்தை பார்த்த வெற்றி மாறன், பா.ரஞ்சித் , சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் பாராட்டியுள்ளனர். அது போல் கிரிக்கெட் வீரர்கள் ஹர்பஜன் சிங், வருண் சக்கரவர்த்தி போன்றவர்கள் இந்த படத்தை மனதார பாராட்டியுள்ளனர்.
கெத்து என்ற கேரக்டரில் அட்டகத்தி தினேஷ் நடித்துள்ளார். இவருக்கு கிரிக்கெட் என்றால் உயிர். ஆனால் இவருடைய மனைவிக்கு தெரியாமல் விளையாடுவார். கிரிக்கெட் விளையாட்டில் அட்டக்கத்தி தினேஷ் களத்தில் இறங்கும்போது “நீ பொட்டு வச்ச தங்கக் குடம்” என்ற பாடல் ஒலிபரப்பப்படும். அது போல் அவர் அந்த விளையாட்டில் மேன் ஆப் தி மேட்ச்சாக தேர்வானாலும் அந்த பாடலை ஒருங்கிணைப்பாளர்கள் ஒலிப்பரப்புவார்கள்.
இதை வைத்தே தனது கணவர் வேலைக்கு செல்வதாக சொல்லிவிட்டு கிரிக்கெட் விளையாட வந்திருக்கிறார் என்பதை அறிந்த அவரது மனைவி, களத்திற்கு வந்து அழைத்துச் சென்று விடுவார். அது போல் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஹரீஷ் கல்யாணுக்கும் கிரிக்கெட் என்றால் உயிர். அவர் தனது வீட்டுக்கே விசில் போடு என எழுதி சென்னை சூப்பர் கிங்ஸின் அடையாளமான மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் அடித்திருப்பார். இந்த நிலையில் தினேஷின் மகளை ஹரீஷ் கல்யாண் காதலிப்பார். கடைசியில் இருவரும் ஒன்று சேர்க்கிறார்களா? என்பதுதான் கதை.






