ஆடிப்பூரம்: ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் ஆண்டாள் அவதாரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

108 வைணவத் திருத்தலங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலாகும்.லட்சுமி தேவியின் அம்சமாகிய ஸ்ரீஆண்டாள் மானிடப் பெண்ணாகப் பிறந்து பூமாலை சூட்டியபின் பாமாலை பாடி இறைவனை அடைந்ததாக வரலாறு உண்டு. இங்கு ஆண்டாளின் ஜன்ம நட்சத்திரமான ஆடிப்பூரத்தன்று தேர்திருவிழா மிக வெகுவிமர்சையாக நடைபெறும்.அதன்படி, இந்த வருடத்திற்கான ஆடிப்பூரத் திருவிழா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

12 நாள்கள் நடைபெறும் ஆடிப்பூர விழாவின் ஐந்தாம் நாளில் (3-ம் தேதி) கருட சேவையும், அதனை தொடர்ந்து 5-ம் தேதி சயன சேவையும் நடைபெற இருக்கின்றன. முக்கிய நிகழ்வான திருஆடிப்பூரத் தேரோட்டம் வருகிற ஆகஸ்டு 7-ம் தேதி காலை 9.05 மணிக்கு நடைபெற இருக்கிறது.

பெரிய திருத்தேரில் ஸ்ரீஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வைபவத்தில் திரு ஆடிப்பூரத் தேர்த் திருவிழா வைபவத்தில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வர்.
ஆடிப்பூரத் தேர்திருவிழாவையொட்டி, ஆண்டாள் கோயிலில் நடைபெற்ற கொடியேற்ற வைபவத்தில் ஏராளமான உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கலந்துகொண்டு ஆண்டாளை சாமி தரிசனம் செய்தனர். தேர் திருவிழாவையொட்டி ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *