திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரைப் பகுதியில் கடல் அரிப்பினைத் தடுக்கும் வகையில் ரூ.19.80 கோடி மதிப்பில் நவீனத் தொழில்நுட்பத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தொடங்கித் தீவிரமாக நடந்து வருகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரைத் தலமும் ஆனது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். அலைகள் ஆர்ப்பரிக்கும் அழகிய கடற்கரை ஓரத்தில் இருந்து 67 மீட்டர் தொலைவில் உள்ளது இக்கோயில் 137 அடி உயரமுள்ள ராஜகோபுரம், கடற்கரையில் இருந்து 140 மீட்டர் தொலைவில் உள்ளது. இக்கோயில் கருங்கற்களால் கட்டப்பட்டு இருப்பதால் கடல் காற்று மற்றும் ஈரப்பதத்தில் அரிப்பு ஏற்படாமல் தடுக்கப்படுகிறது.
ஆனால், கோயிலில் கிழக்கு மற்றும் வடக்குக் கடற்கரைப் பகுதியை ஒட்டியுள்ள தடுப்புச்சுவர்கள் புயல் மற்றும் கடல் அரிப்பினால் சேதமடைந்தது. இதனால், பக்தர்களின் பாதுகாப்பிற்காகக் கோயில் கிழக்குக் கடற்கரை பகுதியில் தொடங்கி வடக்குப் பகுதிக் கடற்கரை வரையிலும் ரூ.19.80 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பினைத் தடுக்கும் வகையில் சுற்றிலும் தடுப்புச்சுவர்கள் அமைக்கும் பணி, கடந்த பிப்ரவரி 17-ம் தேதி காணொலி மூலம் தொடங்கி வைக்கப்பட்டது.






